மேலும்

மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு தொடர்ந்து உதவுவோம் – என்கிறது அமெரிக்கா

Jonathan Stiversசிறிலங்காவில் மனித உரிமையை பேணவும் நல்லிணக்க, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை பலப்படுத்தவும் அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று அமெரிக்காவின் உதவித் திட்டங்களுக்கான ஆசியப் பிராந்திய உதவி நிர்வாகி ஜொனாதன் ஸ்டிவர்ஸ் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உதவித் திட்டங்கள் தொடர்பான ஆசியாவுக்கான உதவி நிர்வாகி ஜொனாதன் ஸ்டிவர்ஸ் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ 2015 ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசியல் மற்றும் பாரிய மறுசீரமைப்புக்காகவும் சிறந்த எதிர்காலத்துக்காகவும் மக்கள் வாக்களித்தனர்.

சிறிலங்காவில் மனித உரிமையை பேணவும், நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும், பொருளாதார சமத்தன்மை மற்றும் நிலையான தன்மையை தொடரவும் அமெரிக்கா தொடர்ச்சியாக உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் வறுமையை ஒழிக்கவும், கணவனை இழந்த பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தவும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.

எதிர்வரும் ஆண்டுகள், மாதங்களில் எமது இரண்டு நாடுகளினதும் உறவு பலமடையும் என்ற மிகவும் பலமான செய்தி ஒன்றை விடுக்கவே நான் சிறிலங்கா வந்துள்ளேன்.

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தினேன். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அமெரிக்க உதவித்திட்டம் ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தவும் சுயாதீன நிறுவனங்களை வலுப்படுத்தவும் உதவிகளை வழங்கி வருகிறது.

சட்டத்தின் ஆட்சிப்படுத்தலை பலப்படுத்தவும் குடிமக்களின் உரிமைகளை பலப்படுத்தும் சிவில் சமூக நிறுவனங்களை வலுப்படுத்தவும் அமெரிக்கா தொடர்ச்சியாக உதவும்.

1956 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளில், 280 பில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உதவிகளை வழங்க தயாராக இருக்கின்றோம்.

அத்துடன் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவை சிறப்பாக வலுப்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட அமெரிக்கா முன்னிற்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *