மேலும்

53 தமிழ்க் கைதிகளின் உடல்களை சிறிலங்கா படையினர் புதைப்பதைக் கண்டேன் – மயானத் தொழிலாளி

kuttimani1983ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட தமிழ்க் கைதிகள் 53 பேர், இரண்டு கட்டங்களாக சிறிலங்கா இராணுவத்தினரால் பொரளை மயானத்தில் மூன்று பாரிய குழிகளில் புதைக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் அனீஸ் துவான் என்ற மயானக் காவலாளி.

கொழும்பு மாநகரசபையில் தொழிலாளியாகப் பணியாற்றிய அனீஸ் துவான், 1980களில், பொரளை மயானத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இரவுக் காவலாளியாகவும் அவர் அப்போது பணியாற்றியிருந்தார்.

1983ஆம் ஆண்டு ஜூலை இறுதி வாரத்தில் நடந்த இனக்கலவரங்களை அடுத்து, பொரளை மயானத்தில் இரண்டு தடவைகள் பாரிய குழிகளில் 53 பேரின் சடலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் கொண்டு வந்து புதைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஜுலை மாத இறுதிவாரத்தின் ஒரு நாள் இரவு, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், திடீரென மயானத்துக்குள் நுழைந்து கல்லறைகளை அளவெடுத்தனர். இரண்டு இடங்களைத் தெரிவு செய்து, நீண்ட பாரிய குழிகளை வெட்டத் தொடங்கினர்.

அந்த நேரத்தில் மண்அகழும் இயந்திரம் ஒன்றை இராணுவச் சிப்பாய் ஒருவர் செலுத்தி வந்தார். அதிகாரிகளிடம் அனுமதி எதையும் பெறாமல் அவர்கள் நிலத்தில் குழி தோண்டத் தொடங்கினர்.

அந்த இடம் தற்போது, தேவிபாலிகா வித்தியாலயத்துக்கு அருகில் தற்போது வாகனத் தரிப்பிடமாகப் பயன்படுத்தப்படுகிறது.

kuttimani

மயான நிர்வாகி உடனடியாக மாநகர முதல்வருக்கு தெரியப்படுத்தினார். அவர் எதையும் செய்ய வேண்டாம் என்றும், படையினர் தமது வேலைகளை செய்ய அனுமதிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

10 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி ஆழத்தில் இரண்டு பாரிய குழுிகள் தோண்டப்பட்டன. அடுத்த நாள் மூடப்பட்ட இராணுவ ட்ரக் ஒன்றுடன், மண் அகழும் இயந்திரம் மீண்டும் வந்தது.

மூடி மறைக்கப்பட்டிருந்த ட்ரக்கை திறந்த போது, அதில், 35 ஆண்களின் இரத்தம் தோய்ந்த சடலங்கள் கிடந்தன.

அவை அந்தப் புதைகுழிகளில் போட்டு மூடப்பட்டன. அந்தச் சடலங்கள் குட்டிமணி உள்ளிட்ட தமிழ்க் கைதிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அடுத்த நாள், மேலும் 18 சடலங்கள் கொண்டு வரபப்பட்டன. மயானத்தின் பின்புறமாக மற்றொரு குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டன.

எனினும், இந்தச் சடலங்கள் புதைக்கப்பட்ட நாள் தொடர்பாக தமக்கு சரியாக நினைவு இல்லை என்றும் அனீஸ் துவான் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 1983 ஜுலை 25, 27ஆம் நாள்களில், 53 தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களில், ஆயுதப் போராளிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோரும் அடங்குவர் இவர்களுக்கு, 1983ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

1983 ஜுலை 23ஆம் நாள் திருநெல்வேலியில் 13 சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்த தமிழ்க் கைதிகள் மீது ஜூலை 25ஆம் நாள் அதிகாலை 2.15 மணிக்கும், 3.15 மணிக்கும் இடையில் முதற்கட்டத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து 35 தமிழ்க் கைதிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தச் சடலங்கள் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்படாமல்,பொரளை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

ஆங்கில வழிமூலம் –  சிலோன் ருடே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *