மேலும்

ஜெனிவா உறுதிமொழிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – ஹியூகோ ஸ்வைர்

HugoSwireஜூன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும், பொறுப்புக்கூறல் தொடர்பான உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஹியூகோ ஸ்வைர் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

“வடக்கில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் வௌ்ளியன்று கலந்து கொண்டேன்.

அதன் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மக்கள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரையும் சந்தித்தேன்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களையும் சந்தித்தேன்.

இந்தப் பயணம் மற்றும் சந்திப்புகள் மிகவும் ஆரோக்கியமானவை. கடந்த 12 மாதங்களில் சிறிலங்கா பாரிய மாற்றங்களை கண்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் பல விடயங்களை துரிதப்படுத்தியுள்ளதால், ஜெனிவாவில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்திற்கு பிரித்தானியா முழு ஒத்துழைப்பை வழங்கும்.

hugo-swire-lanka (1)

hugo-swire-lanka (2)

hugo-swire-lanka (3)hugo-swire-lanka (4)

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை சிறிலங்காவுக்கு பெற்றுக் கொடுக்கவும் பிரித்தானியா ஆக்கபூர்வமாக செயற்படும்.

அதற்காக, சிறிலங்காவிடம் இருந்து அனைத்துலக சமூகம் எதிர்பார்க்கும் ஜனநாயகம்,  நல்லாட்சி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு போன்ற விடயங்களில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும்.

சிறிலங்காவின் புதிய ஆரம்பத்திற்கு பிரித்தானியா முழுமையான பங்களிப்பு செய்து வருகிறது.

உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரித்தானிய முதலீடுகள் , அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் என பல்வேறு வகையில் இலங்கையுடன் ஒன்றிணைந்து பிரித்தானியா செயற்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் சிறிலங்காவில் வதியாத பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரையும் பிரித்தானியா நியமிக்கவுள்ளது.

இவ்வாறான விடயங்கள் ஊடாக, 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப ஜனநாயக சூழலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக சிறிலங்கா  இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்குவதுடன் உலக சமாதானத்திற்கு பங்களிப்பு செய்யவும் முடியும்.

வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடினேன்.  அவர், மக்களின் காணிகள் இராணுவ வசம் இருப்பதாக தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிக்கும் பொறிமுறையை கையாண்டு வருகிறது . அது மேலும் துரிதமாக இடம்பெற வேண்டும் என்பதே பிரித்தானியாவின் எதிர்பார்ப்பாகும்.

அத்துடன் அந்தக் காணிகளை மக்கள் பயன்படுத்த கூடிய வகையில் மீள வழங்கப்பட வேண்டும்.

பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் வடக்கு, கிழக்கை மீண்டும் கட்டியெழுப்ப ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இங்கு முதலீடுகளை செய்ய விரும்புகின்றனர். இதற்கான சூழல் அமைவது அவசியம்.

ஜெனிவாவிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக சிறிலங்கா அரசாங்கம் உள்ளக பொறிமுறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும்.

பிரித்தானியா இதற்கான முன்னெடுப்புகளின் போது சிறிலங்காவுக்குத் தேவையான ஒத்துழைப்புகள் அனைத்தையும் வழங்கும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக நாங்கள் எந்த அழுத்தங்களையும் சிறிலங்காவுக்கு கொடுக்கவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் உறுதிமொழிகளை நிறைவேற்ற பல துரித நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக முன்னெடுத்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *