மேலும்

வெளிநாட்டு அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் 

சிறிலங்காவின் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய பாலியல் வன்முறை பற்றிய ஐ.நாவின் புதிய அறிக்கை, சிறிலங்காவில் அனைத்துலக சட்டமீறல் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கான போராட்டத்தின் மற்றொரு படியாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, பாலியல் வன்முறை என்பது சிறிலங்கா அரச படைகளால் “வேண்டுமென்றே, பரவலான மற்றும் திட்டமிட்ட மீறல்களின் ஒரு பகுதியாக இருந்தது என்றும், இது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குச் சமமானது என்றும் கண்டறிந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம்  இத்தகைய குற்றங்களில் தப்பிப்பிழைத்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் நீதியை வழங்குவதற்கும் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்குமான அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகிறது.

இலக்கு வைக்கப்பட்ட தடைகள், குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுப்புகள் உட்பட பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவ வேண்டும்.

போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழ்ப் பெண்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், நீண்ட காலமாக அறியப்பட்டாலும், பொறுப்பானவர்களை தண்டிக்க விரும்பாத சிறிலங்கா அரசாங்கங்களால் திட்டமிட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் புறக்கணிக்கப்பட்டது, மறைக்கப்பட்டது மற்றும் நியாயப்படுத்தப்பட்டது என்பதை ஐ.நா. அறிக்கை காட்டுகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய  துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை சிறிலங்காவின் சர்வதேச பங்காளிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் தொடர்பான அனைத்துலக குற்றங்களை நம்பகத்தன்மையுடன் விசாரித்து வழக்குத் தொடர, அடுத்தடுத்து வந்த சிறிலங்கா  அரசாங்கங்கள் தவறிவிட்டன.

அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம் 2024 இல் பதவிக்கு வந்த போது “நீதி வழங்குவதாக” உறுதியளித்தது, ஆனால் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை, அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களும் உயிர் பிழைத்தவர்களும் நீண்டகாலமாக துன்பப்படுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான மாநாடு மற்றும் ஐ.நா. பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட அனைத்துலக பெண்கள் உரிமைகள் தரநிலைகளின் கீழ், மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை சிறிலங்கா நிவர்த்தி செய்யத் தவறியது பொறுப்புக்கூறல் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகள் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது.

2009 மே 18ஆம் திகதி முடிவடைந்த ஆயுத மோதலின் போது, ​​இரு தரப்பினரும் ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்தனர், குறிப்பாக சண்டையின் இறுதி மாதங்களில்,  அரசாங்க படையினரால் நினைவுப் பொருட்களாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அலைபேசி காணொளிகள், கைதிகள் நீதிக்குப் புறம்பான  மரணதண்டனை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் நிர்வாண சடலங்களைக் காட்டுகின்றன.

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்கள் இதுபற்றிய விசாரணைகளை முடக்கி, நீதியை மறுத்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது.

பாலியல் வன்முறை சிறிலங்கா அரசால் “நிறுவன ரீதியாக செயல்படுத்தப்பட்டது” என்றும், போர் முழுவதும் “தகவல்களைப் பிரித்தெடுப்பதற்கும், ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை அச்சுறுத்துவதற்கும், பயம் மற்றும் அவமானத்தின் பரவலான சூழலை ஏற்படுத்துவதற்கும் ஒரு மூலோபாய கருவியாகப் பயன்படுத்தப்பட்டது” என்றும் ஐ.நா. ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பெரும்பாலும் மோதலால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மேலும் இந்த மீறல்கள் முதன்மையாக அரசு நடத்தும் தடுப்பு மையங்களில் நிகழ்ந்துள்ளன.

உயிர் பிழைத்தவர்கள் நீடித்த மருத்துவப் பிரச்சினைகள் மற்றும் சமூக களங்கத்தை நினைவு கூர்ந்துள்ளனர்.

இருப்பினும், சிறிலங்காவில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு “நீதி அல்லது மறுசீரமைப்புக்கான பாதை தற்போது தெரியவில்லை” என்றும் ஐ.நா ஆய்வாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கமும் அதன் அனைத்துலக கூட்டாளிகளும் மருத்துவ சிகிச்சை மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட ஆதரவை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை அவசரமாக உருவாக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களைத் தண்டிக்க சிறிலங்கா கடமைப்பட்டுள்ளது, மேலும் அது நிகழும் வரை, வெளிநாட்டு அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்  என்று மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

அதாவது சட்ட செயல்முறைகளுக்கு ஆதரவை வழங்குதல், அமைதி காக்கும் பணிகளுக்கான இராணுவ வீரர்களை சிறப்பாக ஆய்வு செய்தல் மற்றும் வெளிநாடுகளில் குற்றவியல் வழக்குகளை உலகளாவிய அதிகார வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *