மேலும்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 03

‘தனது விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் மீது எதிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் அந்த இனத்திற்கு உடனடி பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அது நிரந்தரமானதல்ல. அந்த இனத்தால் அதிலிருந்து மீள முடியும்.

ஆனால் அந்த யுத்தத்தின் பின்னர் அந்த இனத்தின் கலாச்சார தளத்திலே எதிரி ஒத்தோடிகளைக் கொண்டு நடத்துகின்ற நிழல் யுத்தம் மிகவும் ஆபத்தானது. இந்த கலாச்சார ஆக்கிரமிப்பு  யுத்தத்தை தனது விடுதலைக்காக போராடிய ஒரு இனம் முறியடித்து வெற்றிகொள்ளவில்லை என்றால் அந்த இனம் நிரந்தரமாக தோற்றுப்போய் விடும். அதனால் மீளெழுச்சி கொள்ளவே முடியாது.’

0000

நிழல் யுத்தத்தின் ஆபத்தை புரிந்து கொள்வது தொடர்பாக….

ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைகின்ற போது எதிரி உடனடியாக  மேற்கொள்ளுகின்ற அடுத்த கட்ட நடவடிக்கை அந்த இனத்தின் கலாச்சாரத் தளத்தை குறிவைத்து நடத்துகின்ற நிழல் (கலாச்சார) யுத்தமாகும்.

இந்த யுத்தம் –

  1. போராட்ட கலாச்சாரத்தை இல்லாதொழிப்பது.
  2. இன (தேசிய) அடையாளத்தை சிதைப்பது.
  3. தாயக கோட்பாட்டை சாத்தியமற்றதாக்குவது, என்ற மூன்று இலக்குகளை குறிவைத்து நடத்தப்படுகிறது.

போராட்ட கலாச்சாரம் என்று  சொல்கிறபோது சிலர்  அதை ஆயுத கலாச்சாரம், வன்முறை கலாச்சாரம்,  பாசிச கலாச்சாரம் என்ற தங்கள் பார்வை கோளாறுக்கு ஏற்ற கண்ணாடிகளை அணிந்து அதற்கு பொழிப்புரை , விளக்கவுரை என்று பல்வேறு வியாக்கியானங்களை செய்யக் கூடும்.

நாம் அவற்றை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் போராட்டக் கலாச்சாரம் அல்லது புரட்சிக் கலாச்சாரம் என்றால் என்ன? அது எதை சாதித்தது என்பவை பற்றிப் பார்க்கலாம்;.

இந்தக் கலாச்சாரத்தை நாங்கள் புரிந்து கொள்வதற்கு முதலில் முரண்பாடுகள் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகும்.

நாம் வாழுகின்ற இந்தப் பிரஞ்சமும் அதன் ஒரு அங்கமான இந்த உலகமும் இந்த உலகத்தில் வாழும் நாமும் முரண்பாடுகளின் அடிப்படையிலே இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

கூட்டலும் – கழித்தலும், பெருக்கலும்- பிரித்தலும் , வினையும்- எதிர்வினையும், பிரிதலும்-சேர்தலும்,கொந்தளிப்பும்-அமைதியும், வெப்பமும் -குளிரும் , போரும்- சமாதானமும் என்று இப்படி எண்ணற்ற முரண்பாடுகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

முரண்பாடு என்பது ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும் அதே நேரத்தில், அது ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகவும் கூட இருக்கும்.

உதாரணமாக யுத்தமும் -சமாதானமும் என்ற முரண்பாட்டை எடுத்துக்கொண்டால்,  யுத்தம் நடந்தால் தான் சமாதானம் என்பதற்கான தேவை வரும். சமாதானம் குலைந்து போனால் தான் மறுபடி யுத்தம் வரும். எந்த இடத்திலும் யுத்தம் என்ற ஒன்று நடைபெறாமல்  சமாதானம் வந்தது என்று சொல்லமுடியாது. அதாவது யுத்தம் என்ற  செயல் தான் சமாதானம் சொல்லுக்கு அர்த்தமும் வடிவமும் கொடுக்கிறது.

இன்னொரு உதாரணமாக,  தொழிலாளி- முதலாளி என்ற முரண்பாட்டை எடுத்துக்கொண்டால், தொழிலாளிகளின் உழைப்பினால்தான் முதலாளி முதலாளியாக இருக்கிறான். மறுபுறத்தில் முதலாளி முலதனம் போட்டு தொழில் நடத்துவதால் தான் தொழிலாளிக்கு வேலை கிடைக்கிறது. அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்துக்கொண்டு தான்,  அவன் உயிர்வாழ்கிறான். ஆனால் அவன் பெறும் அந்த ஊதியம் முதலாளி போட்ட முலதனத்தில் இருந்து எடுக்கப்படவில்லை. அவனது அதாவது தொழிலாளியின் உழைப்பால் கிடைக்கும் உபரியில் (இலாபத்தில்) இருந்தது தான் அவனுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த உழைப்பால் வந்த உபரியின்(இலாபத்தின்) பெரும்பகுதியை முதலாளி தனதாக்கிக் கொள்கிறான். தொழிலாளியின் உழைப்பு முதலாளி,  முதலாளியாக இருக்க உதவுகிறது. முதலாளியின் முதலீடும் இலாப வேட்டையும் தொழிலாளி, தொழிலாளியாக இருக்க வைக்கிறது.

ஒன்றில் ஒன்று தங்கியும் ஒன்றை விட மற்றது வேறுபாட்டுடனும் இருக்கும் இந்த முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் வளர்ச்சி அல்லது மாற்றம் என்று நாங்கள் குறிப்பிடுகின்ற சொற்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

ஓரு இனம் அல்லது சமூகம் என்று பார்த்தால் ஓவ்வொன்றும் தனக்குள்ளும் தனக்கு வெளியிலும் முரண்பாடுகளை கொண்டதாக இருக்கும்.

உதாரணமாக தமிழீழத் தமிழர்களான எம்மை எடுத்துக் கொண்டால் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கும் எமக்கும் இடையே ஆழமான  முரண்பாடு இருக்கிறது. இந்த முரண்பாடு எமக்குரிய புற (வெளி) முரண்பாடாகும். இது ஒரு பகை முரண்பாடும் கூட.

அதேநேரம் எமக்குள்ளே ஊர் முரண்பாடு, பிரதேச முரண்பாடு, சாதிய முரண்பாடு, மதமுரண்பாடு என்று எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன.இவை எம்முடைய உள் முரண்பாடுகளாகும்.

இவற்றை விட உலகெங்கிலும் இருக்கக் கூடிய அனைத்து சமூகங்களிலும் இருக்கக் கூடிய அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாடு தமிழீழத் தமிழர்களிடமும் இருக்கிறது. ஆனால் இதை உழைக்கும் வர்க்கம் எதிர் ஆளும் வர்க்கம் என்ற பொதுவான வரையறையை கொண்டு மதிப்பிட முடியாது.

தமிழீழ சமூகம் ஏனைய ஐரோப்பிய சமூகங்களைப் போல் படிமுறை வளர்ச்சியைக் கொண்ட சமூக அமைப்பை கொண்டதல்ல.அது இன்னமும் தாய் வழி சமூக அமைப்பு, அடிமை சமூக அமைப்பு, நிலபிரபுத்துவ சமூக அமைப்பு ஆகியவற்றின்  எச்சங்களை  கட்டிக்காத்துக் கொண்டு அவற்றை இன்றைய உலக பெருமுதலாளித்துவ சமூக அமைப்புக்கு எற்றாற்போல மறு நிர்மாணம் செய்து கொண்டு வாழுகின்ற தனித்துவமான சில குணாம்சங்களைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாகும். இந்த சமூக அமைப்பை நாம்  பொதுவான அரசியல் சித்தாந்த கோட்பாடுகளுக்குள் அடக்க முடியாது.

1970 களிலே தமிழீழ தமிழ் சமூகத்துக்கான புறமுரண்பாடான இனமுரண்பாடு கூர்மையடைந்த போது இயங்கியல் விதிகளின் படி அதன் உள்முரண்பாடுகள் தீர்ந்திருக்க வேண்டும் அல்லது நீர்த்துப் போயிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  தமிழ் மக்கள் ஒற்றுபட்டு நிற்கிறார்கள் என்று மேடைகளில் நீட்டி முழங்கினாலும், யதார்த்தத்தில் போரினால் இடம்பெயர்ந்த போதும் சாதியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இடம் பெயர்ந்ததும்,  குடி தண்ணீர் கிணறுகளில் நஞ்சு கலந்ததும்,  பிரதேச வேறுபாடுகள் பார்த்ததும், ஊர் வேறுபாடுகள் பார்த்ததும் தொடர்ந்தன.

இதை ஒழிக்க வேண்டிய தேவை அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் ஏற்பட்டது. இதை கட்டிக்காத்து வந்த சீரழிவு கலாச்சாரத்துக்கு பதிலாக புரட்சிக் கலாச்சாரம் அல்லது போர் கலாச்சாரம் ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை போராட்ட அமைப்புக்களுக்கு ஏற்பட்டது.

உதாரணமாக நாம் நாளாந்தம் பயன்படுத்தும் மின்சாரத்திலே  நேர் மின்சாரம், எதிர் மின்சாரம் என்று  எதிர் முரண்பாடுகள் கொண்ட 2 பிரிவுகள் இருக்கின்றன. இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டால் தீப்பிடித்தக்கொள்ளும். ஆனால் அந்த தீயை வெளிச்சமாகவே அல்லது வேறு தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த இரண்டையும் ஒரு மின் விளக்கில் இணைத்தால் நாங்கள் வெளிச்சத்தை பெறமுடியும். அல்லது வேறு மின் சாதனத்தில் இணைத்தால் அந்த சாதனத்தை இயக்க முடியும்.

அதே போலத்தான் ஒரு விடுதலைப் போராட்ட சூழலிலே ஒரு புரட்சிகர கலாச்சாரத்தை முன் வைப்பதன் மூலம் தான் ஒரு விடுதலை அமைப்பு அக-புற முரண்பாடுகளை சரியாகக் கையாண்டு தனது  இலக்கை அடைய முடியும். புற முரண்பாடும் -அக முரண்பாடுகளும் ஒரேநேரத்தில் ஒரே கொதிநிலையோடு கூர்மையாக இருந்தால் எதிரியை வெற்றிகொள்ள முடியாது.

இதில் அனைத்து இயக்கங்களும் தங்களது கொள்ளளவுக்கு ஏற்ப இந்த புதிய போர் கலாச்சாரத்தை  நடைமுறைப்படுத்த முயன்றாலும், இதில் ஒரளவுக்கு வெற்றியடைந்தது விடுதலைப்புலிகள் மட்டுமே.

சமூகத்தின் சரி அரைவாசிப் பேராக இருக்கும் பெண்களை அவர்களுக்கு காலா காலமாக இடப்பட்ட சமூகத் தழைகளில் இருந்து விடுவிக்காமல் இனவிடுதலை சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர்கள்,  அதை நடைமுறையில் செய்து காட்டினார்கள். பெண் என்பவள் ஆணின் மூலதனம் (சீதனம் வழங்குபவள்) அவனது பாலியல் அடிமை, குழந்தை பெறும் இயந்திரம் என்ற மரபு வழி சிந்தனையை மாற்றி பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்கள் அவர்கள். விடுதலைப்புலிகளால் கொண்டு வரப்பட்ட மணக் கொடை தடைச் சட்டம் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

  • சாதி மறுப்புத் திருமணம்.
  • மக்களுக்காக மரணித்தவர்களை நினைவு கூர்தல்.
  • தமிழ் தேசிய ஊடக கருத்தியல்.
  • இளையேரின் ஆளுமை,தலைமைத்துவ பண்பு கூட்டுச் செயற்பாடு என்பவற்றை ஊக்குவிக்கின்ற கல்விமுறையை நடைமுறைப்படுத்தல்.
  • கிராமிய மற்றும் பாராம்பரிய கலை வடிவங்களை பாதுகாத்தல்.
  • முதியோரை பாதுகாத்தல்.
  • இயற்கையை- சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல்.
  • மொழியை பாதுகாத்தல்

என்று விடுதலைப் புலிகளின் போர் கலாச்சாரத்தில் அடங்கியிருந்த எண்ணற்ற நல்ல விடயங்களை பட்டியலிட்டுக்கொண்டு செல்லலாம்.

பார்வையற்ற ஒருவன் யானையின் வாலை பிடித்துப் பார்த்துவிட்டு யானை என்றால் அதனுடைய வாலின் அளவில் தான் இருக்கும் என்று சொல்வதைப் போன்ற புலி எதிர்ப்பு அரச ஒத்தோடிகளின் ‘புலிகள் பாசிஸ்டுகள், அவர்களது போர்; கலாச்சாரம் வன்முறை கலாச்சாரம் ‘ என்ற ஒற்றை விமர்சனத்தக்கு அப்பால் யதார்த்தத்தில் ஒரு புரட்சி கலாச்சாரம் அங்கே நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் இன்றைக்கு முள்ளிவாய்க்காலின் பின்னர் இதற்கு முற்றிலும் எதிரான கலாச்சார யுத்தம் ஒன்று களத்திலும் புலத்திலும் எதிரியால் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

இன்று தமிழர் தாயகப்பகுதியிலே சர்வ சாதாரணமாக நடந்துவரும் போதைப் பொருள் வியாபாரம் இந்த கலாச்சார யுத்தத்தின் ஒரு அங்கமாகும் .அதுவும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தப் போதைப்பொருள் வியாபாரம் இளையோரின் ஆளுமை, தலைமைத்துவப் பண்பு மற்றும் கூட்டுச் செயற்பாடு என்பற்றை அழிக்கும் நோக்கத்தை கொண்டது.

அடுத்து தாயகத்தில் இன்றைக்கு என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும்  முறைகேடான பாலியல் உறவுகள், சிறுமிகள் கர்ப்பமாதல், மணமுறிவுகள் என்பனவும் இந்த கலாச்சார யுத்தத்தின் மற்றொரு பகுதியாகும். இது குடும்ப உறவுகளை சிதைத்து ஆரோக்கியமற்ற சீரழிவு கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

சிங்கள இராணுவத்தினரைக் கொண்டு சிறுமிகளையும், பெண்களையும் போதைக்கும் பாலியல் இச்சைக்கும் அடிமையாக்கி கர்ப்பமாக்கிவிட்டு,  உங்கள் உடலில் சிங்கள இரத்தம் கலந்துவிட்டது என்று சொல்லுவது, அல்லது தமிழ் பெண்களை அவர்களது இன அடையாளத்தை அழிக்கும் நோக்கத்துடன் திருமணம் செய்வது என்பவையும் இந்தக் கலாச்சார யுத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும்.

உளவுத்துறையினரையும் ஒத்தோடிகளையும் வைத்து சாதிய பெருமைகளை பேசியும் சாதிய ஒடுக்குமுறையை அதிகார பலத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும்  திணித்தும் சாதிய முரண்பாடுகளை தூண்டிவிடுவது, வன்முறைக் குழுக்களை வளர்த்து விடுவது,  குழு மோதல்களை உருவாக்குவது, ஊர் சண்டைகளை தோற்றுவிப்பது என்பன இந்த கலாச்சார யுத்தத்தின் மற்றொரு அங்கமாகும்.

இவற்றை விட பெண் போராளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவர்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலை கொடுத்து அவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தை  உருவாக்கி அதை திட்டமிட்டு மக்கள் மத்தியிலே பரப்புவது. இதன் மூலம் பெண் என்பவள் ஒரு போராளியாக இருக்க முடியாது இருக்கவும் கூடாது என்ற செய்தியை மக்களுக்கு செல்வதும் இந்த கலாச்சார யுத்த நிகழ்ச்சி நிரலுக்குள் அடங்கும் ஒரு செயற்திட்டமாகும்;

தாயகத்திலே எதிரியால் இந்த முனைகளிலே நடத்தப்படும் இந்த கலாச்சார யுத்தம் புலத்திலே இதே செயற்திட்டங்களின் அச்சொட்டான பிரதியாக அல்லாமல் வேறு வடிவத்தில் நடத்தப்படுகிறது.

புலம் என்பது எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசம் அல்ல. இங்கே அவனால் புலம் பெயர்ந்த சமூகத்தின் மத்தியில் போதைப்போருள் பாவனை, பாலியல் சீரழிவு நடவடிக்கைகள் கட்டாய திருமணம் போன்ற எதையும் நேரடியாக செய்ய முடியாது. அந்த வடிவத்திலும் இங்கு செய்ய முடியாது.

புலத்திலே இருக்கக் கூடிய மக்களுக்கும் களத்திலே இருக்கக் கூடிய மக்களுக்குமான முரண்பாடுகள்  வேறுபட்ட தன்மையை கொண்டவை. புலத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு வேற்றுமொழி வேற்றுக் கலாச்சார சூழலிலே ஏற்படுகின்ற அந்நியமாதல் ஒரு பெரிய முரண்பாடாகும். அவர்கள் இந்த அந்நியமாதலில் இருந்து விடுபடுவதற்கு தமது தாயகத்திலே போராடும் அமைப்பால் முன்வைக்கப்படும் புரட்சிக் கலாச்சாரத்தால் அதிகளவுக்கு ஈர்க்கப்படுவார்கள். இந்த ஈர்ப்புத்தான் அவர்களை போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய வைக்கும். போராட்ட நிகழ்வுகளில் பங்குபற்றத் தூண்டும்.

எனவே பின் போர் சூழலில் புலத்தில் எதிரியின் முழு வேலைத்திட்டமும், புரட்சிக் கலாச்சாரத்தை முறியடிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும்.

இதன் முதல் படி புலம்பெயர்ந்த மக்களை நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வரையறைக்குள் நாட்டுக்குள் வர அனுமதிப்பது, நாட்டில் திருவிழாக்கள், களியாட்டங்கள், கொண்டாட்டங்களை பிரமாண்டமாக நடத்த அனுமதிப்பது, புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்த விழாக்களை மட்டுமல்லாமல் கடல், மலை, ஆறு என்று போர் நடந்த காலத்தில் தமிழ் மக்கள் செல்வதற்கும் படம் எடுப்பதற்கும் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு செல்லவும் விதம்விதமா படம் எடுக்கவும் அனுமதிக்கப்படும்,

அவர்கள் மீண்டும் புலத்துக்கு திரும்பியதும் தாங்கள் அங்கு விதம் விதமாக எடுத்த கண்கவர் படங்களை எல்லாம் தங்களது சமூகவலைத் தளங்களிலே பதிவேற்றி வேண்டியவர்களுக்கு பகிர்ந்து மகிழ்வார்கள்.இதை பார்த்ததும் மற்றவர்களுக்கும் அங்கு சென்று திரும்ப வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்.

இதன் அடுத்த கட்டமாக நாட்டுக்கு வரும் யாராவது ஒரு போராட்ட செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார். இந்தச் செய்தி அதிக முக்கியத்துவம் கொடுத்து பரப்பப்படும்.

அதேநேரம் புலத்திலே சில ஊடகங்களையும் பத்தி எழுத்தாளர்களையும் விலைக்கு வாங்கி தியாகி- துரோகி வரலாறு எழுதப்படும். போராட்டத்துக்கு வேலைசெய்தவர்கள் புலம் பெயர்ந்து வந்த போராளிகள் பெயர் குறிப்பிடப்பட்டு இனங்காட்டப்படுவார்கள். விடுதலை இயக்க பொறுப்பாளர்கள், தளபதிகளுடைய மின்னஞ்சல் உடைக்கப்பட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களுடைய விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.

இந்த இனங்காட்டல்கள் பகிரங்கப்படுத்தல்கள் அதில் சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காக மட்டும் நடப்பதில்லை.’நீங்கள் போராட்டத்துக்கு உதவிசெய்தால் அல்லது வேலை செய்தால் கண்டிப்பாக எங்களுக்கு தெரியவரும் என்றாவது ஒரு நாள் நீங்கள் இனங்காட்டப்படுவீர்கள்’ என்ற செய்தியை மக்களுக்கு சொல்வதாகும்.

இந்த இனங்காட்டல்கள்; பகிரங்கப்படுத்தல்களை உள்வாங்கிக் கொள்ளும் மக்கள் ‘இவர்கள் துரோகிகள்- அவர்கள் தியாகிகள்’ என்று முடிவெடுத்துக் கொண்டு போராட்ட செயற்பாடுகளில் அதி தீவிரமாக பங்கெடுக்கப் போவதோ அல்லது பங்களிப்பு செய்யப் போவதே இல்லை. மாறாக ‘ஐயையோ நாங்கள் நாட்டுக்கு போய் வரவேண்டும் எங்கள் வீட்டை பார்க்க வேண்டும் காணியை பார்க்க வேண்டும். நல்லூர் , சந்நிதி, வல்லிபுரக்கோவில், வற்றப்பளை மாமாங்கேஸ்வரர், கோணேஸ்வரர் கோவில் திருவிழாக்களுக்கு செல்ல வேண்டும். இயக்கதோடு தொடர்பு வைத்தால் போகமுடியாது. ஆளை விட்டால் போதும்உங்களுடைய சண்டைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் ‘ என்று ஓதுங்கிப் போய்விவார்கள்.

எதிரியின் தேவை என்பது இது தான். புலத்திலே அவன் நடத்தும் கலாச்சார யுத்தத்தின் முக்கியமான அம்சமும் இதுதான்.

 – சிவா சின்னப்பொடி

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *