மேலும்

சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது

மோதல்களின் போது, பாலியல் வன்முறையில் ஈடுபட உத்தரவிட்டவர்கள், உதவி செய்தவர்கள் அல்லது அத்தகைய செயல்களைத் தடுக்க  தவறியவர்கள்  மீது வழக்குத் தொடரும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டு ஆயுத மோதலின் பின்னணியில் நடந்த மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளுக்கான பொறுப்புக்கூறல் குறித்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் புதிய அறிக்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்துலக மன்னிப்புச் சபையின் தெற்காசிய பணிப்பாளர் ஸ்மிருதி சிங் கூறியதாவது:

“இந்த முக்கியமான அறிக்கை, முந்தைய ஐ.நா. விசாரணைகளின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

2009 இல் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்த பின்னரும், மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்ததை இது எடுத்துக்காட்டுகிறது.  அண்மையில் 2024 இல்  பதிவான சம்பவங்களை அது  மேற்கோள்காட்டுகிறது.

மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இருந்து தப்பிய ஆயிரக்கணக்கானோருக்கு இறுதியாக, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதற்கான சிறிலங்கா அரசாங்கத்திற்கான தெளிவான அழைப்பாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

“தமிழ் சமூகத்தினருக்கு எதிரான பாலியல் வன்முறை ‘வேண்டுமென்றே, பரவலாக மற்றும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்ற பரவலாக அறியப்பட்ட உண்மையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்தச் செயல்களில் சில, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்பதையும் இது சரியாக அங்கீகரிக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்டுபிடிப்புகள், அடுத்தடுத்த நிர்வாகங்கள் நிவாரணம் வழங்கத் தவறியதையும், அது தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது ஏற்படுத்தும் பயங்கரமான தாக்கத்தையும் மேலும் வெளிப்படுத்தியுள்ளன.

புதிய அரசாங்கம் செயற்பட தன்னை அர்ப்பணித்துக் கொண்டது, நாங்கள் நீதி வழங்கத் தவறினால், வேறு யார் செய்வார்கள்? என சிறிலங்கா அதிபர் அறிவித்தார். இந்த வார்த்தைகள் செயற்பாட்டுக்கு வரவேண்டிய நேரம் இது.

தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும்,  நீண்டகால தாமதமான உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை விரைவாக உறுதி செய்யும்  நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும்,  இந்த அறிக்கையில் உள்ள பல பயனுள்ள பரிந்துரைகள் மீது கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, மோதல் தொடர்பான பாலியல் வன்முறைச் செயல்கள் “தகவல்களைப் பிரித்தெடுப்பதற்கும், ஆதிக்கத்தை வலியுறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை அச்சுறுத்துவதற்கும், பயம் மற்றும் அவமானத்தின் பரவலான சூழலை ஏற்படுத்துவதற்கும் ஒரு மூலோபாய கருவியாகப் பயன்படுத்தப்பட்டன.இத்தகைய மீறல்கள் நிறுவன ரீதியாக செயல்படுத்தப்பட்டு, மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மோசமான முறையில் குறிவைத்தன என்பதை உறுதி செய்கிறது.

கட்டளைப் பொறுப்பு மூலம், மோதலில் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்கு,  உத்தரவிட்டவர்கள், உதவி செய்தவர்கள் அல்லது அத்தகைய செயல்களைத் தடுக்க தவறியவர்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குத் தொடர  சிறிலங்கா கடமைப்பட்டுள்ளது” என்றும் அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *