இந்தியாவுடன் மறுப்பு, பாகிஸ்தானுடன் இணக்கம் – சிறிலங்காவின் முடிவினால் புதுடெல்லி அதிர்ச்சி
பாகிஸ்தானுடன், சிறிலங்கா செய்து கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டில், “சேவைகள்” துறையை உள்ளடக்க இணங்கியுள்ளது இந்தியாவுக்கு அ்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் சேவைகள் மற்றும், முதலீடு ஆகிய விடயங்களை உள்ளடக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கொழும்பில் நேற்று தெரிவித்திருந்தார்.
அதேவேளை, இந்தியாவுடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டிலோ, அல்லது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டிலோ சேவைகள் துறையை உள்ளடக்க சிறிலங்கா தரப்பு மறுப்புத் தெரிவித்து வருகிறது.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டில் சேவைகள் துறையை உள்ளடக்கினால், சிகையலங்கரிப்பாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்குப் படையெடுப்பர் என்று இலங்கையர்கள் அஞ்சுகின்றனர்.
அதேவேளை, சேவைகள் துறையை உள்ளடக்கியதாக பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை செய்து கொள்ள கொழும்பு இணங்கியுள்ளது புதுடெல்லியை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுடனான உடன்பாட்டில் சேவைகள் துறையை உள்ளடக்குவதற்கு சிறிலங்கா அவ்வளவாக அஞ்சவில்லை என்றும் கூறப்படுகிறது.
சிறிலங்காவில் இந்தியாவின் பொருளாதார தலையீடு பரந்துபட்டது என்றும், கனதியானது என்றும், ஆனால் பாகிஸ்தானின் பங்கு சிறிதளவே என்பதால் அந்த அச்சம் சிறிலங்காவுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.