மேலும்

உலங்குவானூர்திகளை பழுதுபார்க்கும் ஒப்பந்தம்- இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு 

சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு எம்ஐ -17 உலங்குவானூர்திகளை  (SMH 599, SMH 596, SMH 588, SMH 4416) பழுதுபார்ப்பதற்காக, ஜோர்ஜிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

கேள்விப்பத்திரம் கோரப்பட்டு, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் மொஸ்டாரைச் சேர்ந்த மெஸ்ஸர்ஸ் வின்ஸ்லி டிபென்ஸ் குழுமம் என்ற நிறுவனத்திற்கும், அதன் உள்ளூர் முகவராக மெஸ்ஸர்ஸ் செக்யூரேடெக் லங்கா நிறுவனத்திற்கும்  ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைமனுக் கோரப்பட்ட போது, ​​இந்த உலங்குவானூர்திகளை பழுதுபார்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து அதிகாரபூர்வ அனுமதி பெற வேண்டும் என்பது உட்பட நான்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், கேள்விப்பத்திரம் வழங்கப்பட்ட நேரத்தில், எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறும் ஒரு கடிதத்தை மட்டுமே அந்த நிறுவனம் சமர்ப்பித்திருந்தது என அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின்படி, சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்து ஆணையம், இந்த விமானங்களின் பதிவு  2022  மே 10ஆம் நாள் முதல் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரிடரின் பின்னர்,  ​​இந்த உலங்குவானூர்திகளை அவசரமாகப் பழுதுபார்க்க வேண்டும் என்று அதிபர்  நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம், பழுதுபார்க்கும் பணிகளை உள்ளூரிலேயே மேற்கொள்ள அனுமதிக்குமாறு விமானப்படையிடம் கோரியதாகக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக விமானங்களைக் கொண்டு செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின்  ஊடகப் பேச்சாளர்  பிரிகேடியர் பிராங்க்ளின் ஜோசப், முறையான நடைமுறைகளின் படியே ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *