இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறிலங்கா எங்கே?- ஹர்ஷ டி சில்வா கேள்வி
பிராந்திய மாநாடு ஒன்றில் சிறிலங்கா பங்கேற்காதது குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளார்.
9ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாடு மொறிஷியசில் ஏப்ரல் 10ஆம் நாள் ஆரம்பமாகி 12ஆம் நாள் (இன்று) வரை இடம்பெறுகிறது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா,
சிறிலங்காவுக்கு என்னவானது? வெளிவிவகார அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் கூட எங்கே?
இந்த முக்கியமான கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஏன் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை?
தயவுசெய்து, ஒருமுறை சொன்னது போல ‘செலவுக் குறைப்பு’ என்றோ அல்லது நிலக்கரி ஊழல் தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது என்றோ சொல்லாதீர்கள்.
பதவியில் இருக்கும் நீங்கள் இந்தக் கூட்டங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாவிட்டால், இந்தியப் பெருங்கடலில் எமது இயற்கை அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உருவாகும் வாய்ப்பு நழுவி விடும் என்றும் பதிவிட்டுள்ளார்.

