ஹெய்டிக்கான கும்பல் ஒடுக்கும் படையில் இணைவது குறித்து சிறிலங்கா ஆலோசனை
ஹெய்ட்டியில் ஐ.நா ஆதரவுடன் நடைபெறும், சர்வதேசப் பணிக்கு பங்களிப்பது குறித்த சாத்தியங்களை அரசாங்கம் தற்போது மதிப்பீடு செய்து வருவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.நா. தீர்மானம் 2793-க்கு இணங்க, ஹெய்ட்டியில் கும்பல் வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்காக, ஐ.நா ஆதரவு பெற்ற கும்பல் ஒடுக்கும் படைக்கு சிறிலங்கா படையினரை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹெய்ட்டியில் சாத்தியமான பணியை நாங்கள் பரிசீலித்து வருகிறோம், மேலும் இது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
முன்மொழியப்பட்ட பணியின் அளவுருக்கள் குறித்து நாங்கள் ஆலோசனையையும் விளக்கத்தையும் கோரியுள்ளோம்.
இந்தப் பணி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
என்றாலும், கடந்த பத்தாண்டுகளாக அமைதி காக்கும் பணிகளுக்கான தனது பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா வலியுறுத்தி வருகிறது.
அமைதி காக்கும் பணிகளில் பங்களிப்பது ஆயுதப் படைகளுக்குப் பயனளிக்கும். அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் நிலையை மேம்படுத்த உதவும் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
