மேலும்

ஊடகவியலாளர் பிரகீத் கடத்தல் – உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இருவர் சிக்குகின்றனர்

Prageeth Ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இருவரிடம் அடுத்த சில நாட்களுக்குள் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும், இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமையவே இராணுவ உயர் மட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர் இருவரும், கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் இராணுவப் பிரிவில் இயங்கியவர்களாவர்.

இவர்களிடம் நடத்தப்பட்டுள்ள ஆரம்பக் கட்ட விசாரணைகளில், கடந்த 2010 ஜனவரி 24ஆம் நாள்- அதிபர் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, ராஜகிரிய பகுதியில் வைத்து எக்னெலிகொட கடத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட பின்னர் அவர் வடமத்திய மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடத்தல் இடம்பெற்ற காலத்தில், எக்னெலிகொட ஒப்படைக்கப்பட்ட வடமத்திய மாகாண இராணுவ முகாமில் பணியாற்றிய இரண்டு உயர் அதிகாரிகளிடமே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *