அமெரிக்கா வழங்கிய ‘சமுத்ரவிஜய’ சிறிலங்கா கடற்படையில் இணைப்பு
அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான பி-628 சிறிலங்கா கடற்படையில் நேற்று அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பலை, கொழும்பு துறைமுகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட சிறிலங்காவின் உயர்மட்ட படை அதிகாரிகள், அமெரிக்க பதில் தூதுவர் ஜெய்ன் ஹொவெல் உள்ளிட்ட அமெரிக்க தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த போர்க்கப்பல் சிறிலங்கா- அமெரிக்க உறவுகளின் புதியதொரு மைல் கல் என அமெரிக்க, சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள நான்காவது போர்க்கப்பல் இதுவாகும்.




