வர்த்தக, பாதுகாப்பு உறவுகள் குறித்த முக்கிய கலந்துரையாடல்களில் அமெரிக்க தூதுவர்
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற எரிக் மேயர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மற்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தந் சந்திப்புகள் குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து, எதிர்கால வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க ஆதரவு—குறிப்பாக மேகக்கணி (cloud) உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக நவீனமயமாக்கல் போன்றவை—அமெரிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் எமது வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் நாங்கள் பேசினோம்.
அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் முதல் கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் வரை, இரு நாடுகளின் நலன்களையும் மேம்படுத்துவதற்கான வலுவான செயல்திட்டம் எங்களிடம் உள்ளது.” என்றும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மற்றொரு பதிவில், “தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
சிறிலங்காவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வணிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் எமது வர்த்தக உறவைச் சீரமைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்.
உயர்தரப் பொருட்கள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கி, இரு நாடுகளுக்கும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் வலுவான கூட்டாளிகளாக அமெரிக்க நிறுவனங்கள் திகழ்கின்றன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


