க்ஷரியா சட்டத்தின் கீழேயே அனோஜனுக்கு மரணதண்டனை – விஜித ஹேரத்
க்ஷரியா சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என சவூதி தரப்பு சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்தே, சிவராசா அனோஜனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், அனோஜனுக்காக சிறிலங்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இரு நாடுகளையும் சேர்ந்த சட்ட நிபுணர்களிடமிருந்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அனோஜனுக்கு மன்னிப்பு கோரி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சவூதி மன்னருக்கு எழுதிய கடிதத்தை கையளிக்க, பிரதி சபாநாயகர் தலைமையிலான விசேட குழுவொன்று சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது சவூதி வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து, மரண தண்டனையை ரத்து செய்யுமாறு அல்லது தண்டனையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
அனோஜனுக்காக சவூதி அரேபியாவில் ஏற்படும் அனைத்து சட்டச் செலவுகளையும் சிறிலங்கா அரசாங்கமே ஏற்கும் என்றும், அனோஜனின் குடும்பத்தினர் ஏற்கனவே ஏதேனும் சட்டச் செலவுகளை மேற்கொண்டிருந்தால், அதற்கான தொகையையும் அரசாங்கம் திருப்பிச் செலுத்தும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
