22ஐ நிறைவேற்றுவதில் ஆளும்கட்சிக்குள் பிளவு இல்லை
22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அரசாங்கத்திற்குள் பிளவுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுமார் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்தைக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுவது குறித்து கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி, சிலர் தங்கள் சொந்த நலன்களுக்காகவே இத்தகைய ஊகங்களைப் பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தம் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள், நாடாளுமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்பட்டதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளன.
159 உறுப்பினர்களைக் கொண்ட தங்கள் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பகுதியினர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்கள் என்ற கூற்றுகளையும் அந்த வட்டாரங்கள் நிராகரித்தன.
அரசாங்கக் குழுவில் 57 ஜேவிபி உறுப்பினர்களும் 66 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் உள்ளனர், ஏனையவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜேவிபியுடன் இணைந்து போட்டியிட்டவர்கள் ஆவர்.
22வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்த சட்டமூலம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் போராட்டங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தி கவலைப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனிடையே, 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
