22ஐ நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு தேவையில்லை- உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஒப்புதல் பெறத் தேவையில்லை என சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் நாடாளுமன்றம் கூடிய போது உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.
22வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு பிரிவும், அரசியலமைப்புடன் முரண்படவில்லை என்றும் அதனால், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வரும்போது, பதவியில் இருக்கும் பிரதம நீதியரசருக்கு ஆறாண்டு பதவிக்காலம் என்ற விதிமுறை பொருந்தாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளை, நீதித்துறை திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும், உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
