மேலும்

நேட்டோவுடன் சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு – ரஷ்யா கவலைப்படவில்லை

நேட்டோ அமைப்புடன் சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை நாடுவது, சிறிலங்காவின் இருதரப்பு விவகாரம் என, ரஷ்ய தூதுவர் லெவன் ஜகரியன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

நேட்டோவுடனான சிறிலங்காவின் ஈடுபாடு குறித்து ரஷ்யா கவலைப்படுகிறதா என சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,

“இல்லை, இது உங்கள் இருதரப்பு விவகாரம். மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல், நாங்கள் அழுத்தம் கொடுப்பதில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கனடாவின் விக்டோரியாவில் நடைபெற்ற பாதுகாப்புத் தளபதிகள் மாநாட்டின் ஒரு பகுதியாக, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, நேட்டோ இராணுவக் குழுவின் தலைவர் அட்மிரல் கியூசெப்பே காவோ டிராகோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்போது, இராணுவ நவீனமயமாக்கல், இணையவழி தயார்நிலை, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பேரிடர் மீட்பு ஆகியவை குறித்து  கவனம் செலுத்தப்பட்டதுடன், வன்பொருட்களை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களைப் பெறுதல், கண்காணிப்பை மேம்படுத்துதல், மற்றும் பணியாளர் பயிற்சி மற்றும் தகவல் பகிர்வை விரிவுபடுத்துதல் ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண ஒத்துழைப்பு, குறிப்பாக அவசரகால நடவடிக்கைகளில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்தும்,  சிறிலங்காவுடனான  நீண்டகால உறவை வலுப்படுத்துமாறும் நேட்டோவிற்கு சிறிலங்கா பாதுகாப்பு செயலர் அழைப்பு விடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *