மேலும்

திருமலையில் இரு பெண்கள் கடத்திக் கொலை- சிறிலங்கா கடற்படை பெண் சிப்பாய்கள் கைது

திருகோணமலை- பாலையூற்றில் இரண்டு தமிழ்ப்பெண்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பெண் சிப்பாய்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2008ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள்,  திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த தேன்மொழி சசிகுமார் மற்றும் மேரி டெலிசியா ஆகிய இரு பெண்களும் வெள்ளை வாகனத்தில்   வந்த சிறிலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ‘கன்சைட்’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, கப்பம் கோரப்பட்ட நிலையில்,  படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்கள் கடத்தப்பட்டது குறித்து சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் அதுகுறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்  11 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளின் போது, அதனுடன் தொடர்புடைய சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பெண் படையினர் இரண்டு பேர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையடுத்து, பாலையூற்றுப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட இரு பெண்கள் ‘கன்சைட்’ முகாமில்  கொலை செய்யப்பட்டது  தொடர்பாக, முன்னாள் கடற்படை சிப்பாய்களான சந்தமாலி மற்றும் காவோஸ் ஆகியோர் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டு,  இன்று  திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது,   முன்னாள் பெண் கடற்படையினர்  இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் நாள் வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு திருகோணமலை  நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுடீன் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை   ஒக்டோபர் 5ஆம் நாள் அடையாள அணிவகுப்பில் முன்னிறுத்த  ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *