றோகண விஜேவீரவின் குடும்பத்தின் பராமரிப்புக்கு இதுவரை 26 மில்லியன் ருபா செலவு
ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீரவின் குடும்பத்தினரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, 1992 முதல் இன்று வரை சிறிலங்கா அரசாங்கத்தினால் ரூ. 26,278,052.39 ( சுமார் 26 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டார்.
றோகண விஜேவீரவின் மனைவியான, சித்ரங்கனி பெர்னாண்டோவும், அவர்களது ஆறு பிள்ளைகளும் ஆரம்பத்தில் 1992 ஜூன் 11 ஆம் நாள் முதல் 1999 ஓகஸ்ட் 22 ஆம் நாள் வரை திருகோணமலை கடற்படைத் தளத்தில் அரச பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
1999 ஓகஸ்ட் 23 ஆம் நாள் முதல், அவர்கள் வெலிசற கடற்படைத் தள வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தக் குடும்பத்தின் பராமரிப்புச் செலவுகளை எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ ஏற்கவில்லை.
கடற்படைத் தலைமையகத்தின் வெளித்தொடர்பு அலுவலகம் வழங்கிய தகவலின்படி, வெளிநாடுகளிடமிருந்தும் எந்த உதவியும் பெறப்படவில்லை.
அந்தக் குடும்பத்தில் முதலில் விஜேவீரவின் மனைவி, நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர்.
தற்போது, மனைவியும், சிறப்புத் தேவை கொண்ட ஒரு மகளும் மட்டுமே அரச பாதுகாப்பில் உள்ளனர்.
அரசாங்கம் தற்போது அவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மாதத்திற்கு ரூ.1,53,220.25 செலவிடுகிறது என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1960களில் ஜே.வி.பி.யை நிறுவி, 1971 இலும், 1987 முதல் 1989-க்கு இடைப்பட்ட காலத்திலும் அரசுக்கு எதிராக இரண்டு ஆயுத கிளர்ச்சிகளை வழிநடத்திய றோகண விஜேவீர, 1989 நொவம்பரில் அரச படைகளால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் அவரது குடும்பம் சிறிலங்கா அரச பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக அரசாங்கப் பராமரிப்பில் இருந்து வருகிறது.
