மேலும்

கோட்டாவுக்கு நினைவில் இல்லையாம் – நீதிமன்றில் சாட்சியம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் குறித்த விவரங்களோ அல்லது அந்தச் சம்பவம் தொடர்பாக யாரேனும் தன்னைத் தொடர்பு கொண்டார்களா என்பது குறித்தோ, தனக்கு நினைவில் இல்லை என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில், லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,  கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திலிருந்து மெய்நிகர் முறையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்   நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த காலகட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ச இந்த வழக்கில் ஒரு சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

நேற்றைய விசாரணையின் போது, கீத் நொயாரின் கடத்தலைத் தொடர்ந்து லலித் அழககோனிடமிருந்து அழைப்பு வந்ததா என்று கேட்கப்பட்டபோது, ​​ “அது எனக்கு நினைவில் இல்லை,” என்று கோட்டாபய ராஜபக்ச பதிலளித்தார்.

இந்தச் சம்பவங்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகவும், சாட்சியமளிப்பதற்கு முன்னர் அதன் விவரங்களைத் தான் மீளாய்வு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

கீத் நொயாரின் கடத்தல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் திரிப்பொலி முகாமைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்ததும் தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தனது தலையீட்டின் காரணமாக நொயார் விடுவிக்கப்பட்டார் என்ற கருத்தை கோட்டாபய ராஜபக்ச நிராகரித்தார்; அதனைத் தாம் ‘முற்றிலுமாக’ மறுப்பதாகவும் கூறினார்.

பாதுகாப்புச் செயலராகப் பதவியில் இருந்த காலத்தில் நடந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​ அவை பொய்யானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் நிராகரித்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் அவை புனையப்பட்டவை என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *