பொலன்னறுவ மருத்துவமனை வெடிவிபத்து- விசாரிக்க வருகிறது சீனக் குழு
பொலன்னறுவ தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து விசாரிக்க, சீனக் குழு வரவுள்ளதாக, சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனை சமையலறையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்து குறித்து, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ஊடாக சீன அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வெடிவிபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர். எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஒக்சிஜன் விநியோகக் குழாய்கள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் பாதுகாப்பானவை மற்றும் முழுமையாகச் செயற்படக் கூடிய நிலையில் இருப்பதாகவும் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே, மருத்துவமனையின் அறுவை சிகிச்சைக் கூடங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும், மருத்துவர் அசேல குணவர்தன கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனை சமையலறையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையின் அறுவை சிகிச்சைக் கூடங்கள் மற்றும் சிறுநீரகச் சுத்திகரிப்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது, டயாலிசிஸ் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு விட்டதாகவும், மருத்துவர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக் கூடங்களில் உள்ள எந்தவொரு உபகரணமும் சேதமடையவில்லை. இருப்பினும், வெடிவிபத்தினால் ஒக்சிஜன் குழாய்கள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய கட்டமைப்புகள் பாதிக்கப்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொலன்னறுவ பொது மருத்துவமனையில் உள்ள எலும்பியல் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவதால், அறுவை சிகிச்சை அறைகளை விரைவில் மீண்டும் திறக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவ தேசிய சிறுநீரக மருத்துவமனையை சீனாவே கொடையாக அமைத்துக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

