மேலும்

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது என்று, சிறிலங்கா அதிபருக்கு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும்,  கடிதம் எழுதியுள்ளனர்.

மல்வத்த  பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர், சிறிலங்கா  சட்டத்தரிகள் சங்கத்தின் தலைவர், ராஜீவ் அமரசூரியவுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் உயர் சங்க சபையின் செயலாளர் வண. மெதகம தம்மானந்த தேரர், சிறிலங்கடிா அதிபருக்கு அனுப்புவதற்காக ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது  அதிபருக்கு அனுப்பப்பட்டதா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று  கூறியுள்ளார்.

அதேவேளை, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து விளக்குவதற்காக, நேற்று சிறிலங்காவின்  நீதி அமைச்சர்,  ஹர்ஷன நாணயக்கார மற்றும் சுகாதார அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் நேற்று கண்டியில் பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது,நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான  முன்மொழிவை அரசாங்கம் முன்னெடுத்தால், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஏனைய அரச அதிகாரிகளுக்கும் இதேபோன்ற நீடிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் சுமங்கல தேரர் பரிந்துரைத்துள்ளார்.

பல நாடுகளில் நீதிபதிகள் சுமார் 70 வயது வரையிலும், அதற்கும் மேலாகவும் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், சிறிலங்கா அரசாங்கம் ஓய்வு பெறும் வயதை அந்த அளவிற்கு உயர்த்த முற்படவில்லை என்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்மொழிவு நீதித்துறை சுதந்திரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்ற கூற்றுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *