சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்
சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் முதல் முறையாக அதிகாரபூர்வமாகச் சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், வளர்ந்து வரும் அமெரிக்க-சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
பத்து TH-57 உலங்குவானூர்திகள், அமெரிக்க கடலோரக் காவல்படையின் நான்காவது கப்பல் மற்றும் சிறிலங்கா கடற்படையின் கடலோர ரோந்து கப்பல்களுக்கான 4 மில்லியன் டொலர் மதிப்பிலான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றை வழங்கியதன் மூலம் அண்மையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவு குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தத் திறன்களை மேலும் மேம்படுத்துதல், தயார்நிலையை அதிகரித்தல், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசுபிக் முழுவதும் பகிரப்பட்ட நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

