மேலும்

நாமல் மீது விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் – விளக்கமறியல் நீடிப்பு

எயர் பஸ் விமான கொள்வனவு மோசடி வழக்கில், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக  விரைவில் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக,  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2012-ஆம் ஆண்டில் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு செயல்முறையில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, அரசுத் தரப்புக்காக  முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார,   ஒரு துணை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் நிமல் ஹேமசிறி பெரேரா, தனது சொந்தக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிதியிலிருந்து நாமல் ராஜபக்சவுக்கு 100 மில்லியன் ரூபா கொடுத்தது விசாரணையில் தெரியவந்ததாகவும், இதன் காரணமாகவே அரசுத் தரப்பு அவர நாமல் ராஜபக்சவை நான்காவது சந்தேக நபராகப் பெயரிட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார,நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குக் கோப்பை சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும் இணைந்து ஒரு கூட்டு விசாரணையை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்காக வாக்குமூலங்களை வழங்குவதற்காக, பிரான்சில் உள்ள எயர்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பலமுறை சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர், அடுத்த நீதிமன்றத்  தவணையில்  விசாரணைகள் குறித்த விரிவான முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிவான் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​சிறை அதிகாரிகள்  நாமல் ராஜபக்சவை பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

எயர் பஸ் பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகள் தொடர்பாக நாமல் ராஜபக்ச ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நாமல் ராஜபக்சவை செப்ரெம்பர் 23ஆம் நாள் வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *