மேலும்

யோஷித ராஜபக்ச, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது.

வசந்த கரன்னகொட சிறிலங்கா கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய காலத்தில், 2006 செப்ரெம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 ஆம் நாள்வரை,  பிரித்தானியா அரச கடற்படைக் கல்லூரியில், இளம் கடற்படை அதிகாரிகள் பயிற்சிக்கு,  யோஷித ராஜபக்ச பங்கேற்பதற்கு வசதி செய்து கொடுத்ததன் மூலம், சிறிலங்கா அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதே ஏற்பாட்டின் மூலம், முறையற்ற ஆதாயத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ச மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு  முன்வைத்துள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றப் பத்திரங்களை வழங்குவதற்கு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விரைவில் அழைப்பாணைகள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *