ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகள் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு
ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பான விபரங்களை, சிறிலங்கா அதிபர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
சந்திப்பின்போது, குறித்த பிரதிநிதிகளினால், முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மலையக மக்கள் முகங்கொடுத்துள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அரசியலமைப்பைத் திருத்துவதுடன் நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் முறையும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும், எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தை விட, புதிய மக்கள் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமானது என்றும் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பான கருத்தாடலைத் தொடங்குவதற்கான தேவையையும் தெளிவுபடுத்தினேன்.
வெவ்வேறு மக்கள் சமூகங்கள் தனித்தனியாகத் தமது தேவைகளுக்காகச் செயற்படுவதற்குப் பதிலாக, இலங்கையர்களாக இணைந்து செயற்படும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கான அடித்தளம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தில் எத்தகைய இனவாத மோதல்களும் நாட்டில் இடம்பெறவில்லை எனவும் இங்கு சுட்டிக்காட்டியதுடன், நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறும் ஆட்சி முறையொன்றை உருவாக்குவதே எதிர்பார்ப்பு எனவும் வலியுறுத்தினேன்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டேன்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதும் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் நோக்கமாகும் என்றும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட கம்பனிகளுடன் எட்டப்படவுள்ள உடன்பாடுகளில் மலையக மக்களுக்குச் சட்டரீதியான காணி உரிமை வழங்குவது தொடர்பான சரத்துகளை அதில் உள்ளடக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டேன்.
இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மத்திய மலைநாட்டின் நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யும் வகையிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் இங்கு மேலும் சுட்டிக்காட்டினேன்.
அத்துடன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை விட அதிகமான நிதித் தொகையை 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டேன்.
போரின் காரணமாக வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அந்த மக்களுக்காக இரண்டு கட்டங்களின் கீழ் 13,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டேன்.
இவ்வாறானதொரு கலந்துரையாடலில் இணைந்து கொள்ளக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், நாட்டின் பொதுவான பிரச்சினைகளின்போதும் இதேபோன்று செயற்படுமாறு அனைவரையும் இங்கு கேட்டுக்கொண்டேன் என்றும் சிறிலங்கா அதிபர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


