மாலுமிகளை உடனடியாக திருப்பி அனுப்பக் கோரிய ஈரான்- மறுத்தது சிறிலங்கா
ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரை திருகோணமலைக்கு இழுத்துச் செல்வதற்கு, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என கடந்தவாரம் அறிவிக்கப்பட்ட போதும், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அது கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளது.
5000 தொன்களுக்கு மேல் எடை கொண்ட ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பல், சுமார் 2000 தொன் எரிபொருளையும் கொண்டுள்ளது.
இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ள அதனை, திருகோணமலைக்கு கொண்டு செல்வதற்கு, இழுத்துச் செல்வதுதான் ஒரே வழியாகும்.
எங்களிடம் உள்ள இழுவைப் படகுகள் இந்தக் கப்பலை திருகோணமலைக்கு இழுத்துச் செல்லும் திறன் கொண்டவை அல்ல, அதனால்தான் அதற்கு ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தது.
கப்பலைச் சுற்றியுள்ள அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இன்னும் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது.
முதலாவதாக, இது ஒரு போர்க்கப்பல், போர் நடந்து கொண்டிருப்பதால், கப்பலை இழுத்துச் செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திற்கு, பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நிறுவனம் 200,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் கட்டணம் கேட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியிடம் பேசிய போது, ஐஆர்ஐஎஸ் புஷேரை திருகோணமலைக்கு இழுத்துச் செல்வதற்கான கட்டணத்தை ஈரானிய அரசாங்கம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அரக்ச்சியுடனான தொலைபேசி உரையாடலின் போது, ஐஆர்ஐஎஸ் டேனாவிலிருந்து உயிர்தப்பிய 32 பேரையும், தற்போது சிறிலங்கா அதிகாரிகளின் பராமரிப்பில் உள்ள ஐஆர்ஐஎஸ் புஷேரின் 208 பணியாளர்களையும் திருப்பி அனுப்புமாறு, கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், ஐஆர்ஐஎஸ் டேனாவில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை சிறிலங்கா முதல் கட்டமாக திருப்பி அனுப்பியது.
இரண்டாவது கட்டமாக, ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்லும்.
அந்தக் கப்பல்களின் பணியாளர்களை திருப்பி அனுப்புவது மூன்றாவது கட்டமாகவே இருக்கும். ஆனால் இதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
இது தொடர்பாக சர்வதேச சட்டத்தைப் பின்பற்ற நாங்கள் விரும்புகிறோம்,என்று ஈரானிய வெளியுறவு அமைச்சரிடம் கூறியுள்ளேன். என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
