நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முடக்கநிலையை அறிவிக்குமா?
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க நாட்டில் முடக்க நிலையை ஏற்படுத்துவற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து, வியட்நாம் போன்ற சில நாடுகள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக மூடவும், வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
சிறிலங்கா பொருளாதார நடவடிக்கைகளை சுருக்கி எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க எதிர்பார்க்கவில்லை.
நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
நுகர்வைக் குறைக்கும் நோக்கிலேயே எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. நாட்டில் இருப்பு தீர்ந்த பின்னர், புதிய எரிபொருள் இருப்புக்களை அதிகவிலைக்கு வாங்க வேண்டியிருந்தது.
கடந்த சில நாட்களில் எரிபொருள் நுகர்வு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது.
மார்ச் 1 முதல் 9 ஆம் நாள் வரை டீசல் நுகர்வு 23,000 தொன் அதிகரித்துள்ளது, பெட்ரோல் நுகர்வு 13,000 தொன் அதிகரித்துள்ளது.
சாதாரண டீசல் நுகர்வு ஒரு நாளைக்கு 4000 முதல் 4400 தொன்னாக இருந்த போதும், மார்ச் 1 முதல் 9ஆம் திகதி வரை 59,200 தொன்களும், அதே காலகட்டத்தில் பெட்ரோல் 47,500 தொன்களும் விற்கப்பட்டுள்ளன.
எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதால், அதிக விலையில் கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது. எரிபொருள் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம்.
எரிபொருள் விலையை இன்னும் அதிகளவு உயர்த்த வேண்டும், ஆனால் எமது பொருளாதாரத்தால் அதைத் தாங்க முடியாததால் நாங்கள் அந்தளவிற்கு அதிகரிக்கவில்லை.
போதுமான எரிபொருள் இருப்புள்ள பல நாடுகளிலேயே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியா கூட எரிபொருள் விலையை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. பாகிஸ்தானில் 21 சதவீதம், வியட்நாமில் 19 சதவீதம், அமெரிக்காவில் 13 சதவீதம் மற்றும் நியூசிலாந்தில் 12 சதவீதம் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன,” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
