அமைச்சர் குமார ஜயக்கொடியை பதவி நீக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை பதவியில் இருந்து நீக்குமாறு, இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம், கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் செயலகத்தில் இந்தக் குழு கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்ததாகவும், அமைச்சருக்கு எதிராக ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் கமந்த துஷார, கேள்வி எழுப்பியுள்ளார்.
“முந்தைய அரசாங்கங்களில் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானபோது, ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி அந்த அரசாங்கங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதாக கூறின.
தற்போதைய நிர்வாகமும் அதையே செய்கிறதா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சட்ட நடவடிக்கைகளின் தீர்மானங்களுக்கு பின்னரே, கட்சி எந்தவொரு நடடவடிக்கையையும் எடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த வாரத்தில் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.
