வடக்கு, கிழக்கில் படைமுகாம்களை அகற்றுவது ஆபத்து என்கிறார் பொன்சேகா
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதன் மூலம் எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
“போர் முடிவுக்கு வந்திருக்காது போனால், நாடு இந்தளவிற்கும் எஞ்சியிருக்காது. நிச்சயம் பிளவு ஏற்பட்டிருக்கும்.
ஆனாலும், போர் முடிந்த பின்னரும் நாட்டின் முன்னேற்றப் பயணம் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை.
போர் நிறைவடைந்த பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள சில தமிழர்கள், தமது வீசாவைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது வர்த்தகங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சிறிலங்காவில் மீண்டும் போர் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு தம்மால் மீண்டும் சிறிலங்கா செல்ல முடியாது என்று அவர்கள் அந்த நாடுகளிடம் கூறுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டுக்கு ஓரளவு அச்சுறுத்தல் காணப்படுகிறது.
அந்த அச்சுறுத்தலில் இருந்து முற்றாக மீள்வதற்கும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் யாரோ ஒருவருக்கு முன்னால் மண்டியிடுவதை விடுத்து, பலம் மிக்க நாடாக மாற்றமடைய வேண்டும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்தால், மீண்டுமொரு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம்.
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு என்பது, சர்வதேச நாணய நிதியத்தின் பொறுப்பல்ல.
எனவே, சிறிலங்கா படைகளின் ஆளணியைக் குறைப்பதாகக் கூறுவதை, என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாதுகாப்பு படைகளை கலைத்து, அதன் மூலம் மீதமாகும், 80 பில்லியன் ரூபாவைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
நான் பார்க்கும் கோணத்தில், தேசிய பாதுகாப்பு நாட்டில் இல்லை. பொது மக்கள் பாதுகாப்பும் கூட அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகிறது.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின், பலவீனத்தின் காரணமாகவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
எனவே தான், அனுபவமும் அறிவும் மிக்கவர் அந்த பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று, ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
வடக்கு,கிழக்கில் படை முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால், அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும்.
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தொடர்ச்சியாக அதற்கு இடமளித்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய, கிருமிகள் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்றாகி விடும்.
தேசிய போர் வீரர் தினத்தில் உரையாற்றிய போது சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அமைதிக்காகவே அனைவரும் போராடியதாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அமைதிக்காக தலதா மாளிகையின் மீதோ, சிறி மகா போதியின் மீதோ தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது.
பிரபாகரன் அமைதிக்காக போராடியதாகக் கூறினால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சிறிலங்கா அதிபர் அவரது நிலைப்பாட்டைக் கூறியதால் நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த இடத்தில் ஓடிச் சென்று நீ கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூச்சலிடுவதற்கு நான் முட்டாள் இல்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.