முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை
சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2014ஆம் ஆண்டு விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது, சதொச நிதியைப் பயன்படுத்தி, விளையாட்டு கருவிகளை வாங்கி தேர்தல் பரப்புரைக்காக வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் மகிந்தானந்த அளுத்கமகேயை குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு , அவருக்கு இன்று இந்த தண்டனையை அறிவித்துள்ளது.
அதேவேளை, இந்த வழக்கில், லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை, விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் அதிபர் தேர்தல் பரப்புரையின் போது விநியோகிப்பதற்காக லங்கா சதொசா 28,000 கரம் மற்றும் செஸ் பலகைகளை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்பட்டது.