திருமலையில் 5 சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசு – முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக, இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவருமான, சண்முகம் குகதாசன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கும் இடையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இதனடிப்படையில், திருகோணமலை மாநகரசபையில் ஆட்சி அமைக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழு ஆதரவு வழங்கும்.
மூதூர் பிரதேச சபையில் முதல் 2 ஆண்டுகள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், அடுத்த 2 ஆண்டுகள் முஸ்லிம் காங்கிரசும், தவிசாளர் பதவிகளை பகிர்ந்து கொள்ளும்.
குச்சவெளி பிரதேச சபையில் முதல் 2 ஆண்டுகள் முஸ்லிம் காங்கிரசும் இறுதி 2 ஆண்டுகள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் தவிசாளர் பதவியை வகிக்கும்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் தம்பலகாமம் பிரதேச சபைகளில் இரு கட்சிகளும் இணைந்து செயற்பட்டு ஆட்சியமைப்பது என்றும், இரு கட்சிகளுக்கிடையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தலிலும் இணைந்து செயற்பட கட்சிகள் இரண்டும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.