வேட்பாளர்களுக்கு காலக்கெடு முடிந்தது- நள்ளிரவு வரை காத்திருந்த அதிகாரிகள்
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பரப்புரை வருமானங்கள் மற்றும் செலவினங்களை உள்ளடக்கிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் இலக்கம் 03 இன் படி, தேர்தல்கள் முடிந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி, மே 27ஆம் திகதி நள்ளிரவுடன் இந்த வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் கால எல்லை முடிவுக்கு வந்துள்ளது.
எனினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு அறிக்கைகளை வேட்பாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் மாவட்ட தேர்தல் பணியகங்கள் நேற்று நள்ளிரவு வரை திறக்கப்பட்டிருக்கும் என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்திருந்தார்.
இந்தக் காலக்கெடு எந்த சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது என்றும், 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி தங்கள் நிதி வெளிப்படுத்தல்களை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதேவேளை, பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களின் பிரதிநிதிகளின் பெயர்களை இன்னும் சமர்ப்பிக்காத நிலையில், வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த தாமதம் காரணமாக, உள்ளூராட்சி சபைகளின் அமர்வுகள் ஆரம்பிக்கப்படுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் சபைகளில், பணிகளைத் தொடங்வதற்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.