‘ஒப்பரேசன் சிந்தூர்’ குறித்து விளக்கமளிக்க சிறிலங்கா வராது இந்தியக் குழு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, நடத்தப்பட்ட ஒப்பரேசன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை தொடர்பாக, விளக்கமளிக்க இந்தியா திட்டமிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பரேசன் சிந்தூர் தொடர்பாக, விளக்கமளிக்க இந்தியாவின் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணங்களை ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், இந்திய அனைத்துக் கட்சிக் குழு கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளுமா என இந்தியத் தூதரகத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அந்தக் குழு பயணம் மேற்கொள்ளவுள்ள நாடுகளின் பட்டியல் இந்தியத் தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள எந்த நாடுகளும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
ஏழு குழுக்களாக நாடுகள் வகைப்படுத்தப்பட்டு இந்திய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்படி,
(1) சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீரியா
(2) பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் டென்மார்க்
(3) இந்தோனேசியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்
(4) ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, கொங்கோ மற்றும் சியராலியோன்
(5) அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியா
(6) ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லத்வியா மற்றும் ரஷ்யா
(7) எகிப்து, கட்டார், எதியோப்பியா மற்றும் தென்னாபிரிக்கா.
ஆகிய நாடுகளுக்கே இந்தக் குழுவினர் செல்லவுள்ளனர்.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஏற்கனவே ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கான பயணங்களை நிறைவு செய்துள்ளனர்.