ஐ.நா அமைதிப்படையில் கூடுதல் பங்களிப்பை கோரும் சிறிலங்கா இராணுவம்
ஐ.நா அமைதிப்படையில், சிறிலங்காப் படைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும், கூடுதலான பங்களிப்பைக் கோரும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதுகுறித்து ஐ.நாவின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலர் ஜீன்- பியர் லாக்ரோயிக்ஸ் (Jean-Pierre Lacroix) உடன் சிறிலங்கா இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையிலான சிறிலங்கா தூதுக்குழு, ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த மே 13ஆம் 14, ஆம் திகதிகளில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நடவடிக்கைக்கான அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்கேற்றது.
இதன்போது, சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி.அமரபால, ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலர் ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மே 15ஆம் திகதி நடந்த இந்தச் சந்திப்பின் அமைதி காக்கும் பணிகளில் வெளிப்படைத்தன்மை, தகவமைப்புத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறிலங்காவின் புதிய மனித உரிமைகள் சோதனை மற்றும் வடிகட்டல் முறை குறித்து, ஐ.நா உதவிச் செயலருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
புதிய சோதனை பொறிமுறையின் விரிவான தன்மை, இந்த விடயத்தில் முந்தைய கவலைகளை நேரடியாக நிவர்த்தி செய்கிறது என்றும், 2019 இல் சிறிலங்கா படையினர் மீது ஐ.நா. விதித்த கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி.அமரபால தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை ஆகியவற்றை ஈடுபடுத்தி, பங்களிப்பை அதிகரிக்க சிறிலங்கா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில், பெண் அதிகாரிகள் மற்றும் அமைதிப்படை பணியாளர்களின் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டையும், மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி.அமரபால உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் சோதனை முறைகளை ஐ.நா உதவிச் செயலர் வரவேற்றதாக தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவம், அவரிடம் இருந்து ஏதேனும் உறுதிமொழிகள் கிடைத்ததா என்று குறிப்பிடவில்லை.
ஜெர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் ஆலோசகர் சதுன் லியன்வில, நியூயோர்க்கில் உள்ள நிரந்தர பணியகத்தின் இராணுவ ஆலோசகர் பிரிகேடியர் சுமல் விக்கிரமசேகர மற்றும் காவல்துறை அத்தியட்சகர்ஆர்.எம். விமலரத்ன ஆகியோர் ஐ.நா உதவிச் செயலருடனான சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.