வரிகள் தொடர்பாக அமெரிக்கா- சிறிலங்கா இடையே இன்று மீண்டும் பேச்சு
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுக்கள் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு எதிராக 44 சதவீத இறக்குமதி வரியை அறிவித்த நிலையில், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியது.
இதற்கமைய சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவொன்று கடந்த மாதம் வொசிங்டன் சென்று பேச்சுக்களை நடத்தி, வர்த்தக இடைவெளியை குறைப்பதற்கு தயார் என அறிவித்திருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை குறைக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து கூடுதல் இறக்குமதிகளை மேற்கொள்வதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பணியகத்தின் அழைப்பின் பேரில், இரண்டாவது கட்ட கலந்துரையாடலுக்காக சிறிலங்காவின் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும தலைமையிலான உயர்மட்டக்குழு வொசிங்டன் சென்றுள்ளது.
இந்த இருதரப்பு பேச்சுக்களில், ட்ரம்பின் வரி தொடர்பாக முக்கியமாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.