சிறிலங்காவின் கனிம வளங்களை குறி வைக்கும் இந்தியா- ஆராய வந்தது குழு
சிறிலங்காவில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆராய, இந்தியாவின் சுரங்கத்துறை அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட இந்திய குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
முன்னணி இந்திய பொதுத்துறை சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
சிறிலங்காவின முக்கிய சுரங்கத் தளங்களுக்குச் சென்று உயர் அதிகாரிகளைச் சந்தித்த இந்திய குழுவினர், சுரங்கங்கள் மற்றும் கனிமத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன், தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான கஹடகஹ கிராபைட் லங்கா நிறுவனம், லங்கா கனிய மணல் நிறுவனம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) மற்றும் லங்கா பொஸ்பேட் நிறுவனம் உள்ளிட்ட சிறிலங்காவின் முக்கிய கனிமத் துறை நிறுவனங்களின் தலைவர்களுடனும் இந்தியக் தூதுக்குழுவினர் கலந்துரையாடினர் என்று, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம், மற்றும் மூத்த அரசு அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.
முதலீடு மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வது, மேம்பட்ட சுரங்க தொழில்நுட்பங்களில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் கனிமத் துறையில் மதிப்பு கூட்டலுக்கான கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி புதுடெல்லியில், இந்தியாவின் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் சதீஷ் சந்திர துபே மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கனிமத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தக் குழுவினர் சிறிலங்கா வந்துள்ளனர்.
இந்தியக் குழுவினர், சிறிலங்காவில் உள்ள முக்கிய கனிமச் சுரங்கங்கள் மற்றும், கனிம வளங்கள் உள்ள இடங்களுக்கும் சென்று ஆராய்ந்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டையில், 7.5 மில்லியன் மெட்ரிக் தொன் இல்மனைட், ரூட்டைல்ஈ சிர்கான் ஆகிய கனிமங்களும், புத்தளத்தில், , 45,000 மெட்ரிக் தொன் கிராபைட் மற்றும் 60 மில்லியன் மெட்ரிக் தொன் அபாடைட் ஆகியவை உள்ள நிலையில் இந்தியா அதனை குறி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.