நோர்வே ஆய்வுக்கப்பலுக்கு சிறிலங்கா அரசு அனுமதி மறுப்பு
நோர்வேயின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான டொக்டர் பிரிட்ஜோப் நான்சன் (RV Dr. Fridtjof Nansen) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை, அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சீன ஆய்வுக் கப்பல்களின் வருகைகளுக்கு இந்தியா எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், அனைத்து வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கும், சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரு ஆண்டு தடைவிதித்தது.
அந்த தடைக்காலத்தை மேற்கோள்காட்டியே, நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தற்போது கிழக்கு ஆபிரிக்காவில் மொறிசியசுக்கு அப்பாலுள்ள கடலில் தரித்துள்ள இந்த ஆய்வுக் கப்பல் சிறிலங்காவுக்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, கடந்த டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதும், அதனை தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கவில்லை.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களின் வருகை தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் அறிவித்திருந்த போதும் இன்னமும் அது வெளியிடப்படவில்லை.