நியூசிலாந்து, போலந்து வெளியுறவு அமைச்சர்கள் சிறிலங்கா வருகின்றனர்
இரண்டு உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters), மற்றும் போலந்து வெளியுறவு அமைச்சர் ரடோசா சிகோர்ஸ்கி (Radosaw Sikorski) ஆகியோரே சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் நான்கு நாள்கள் பயணமாக இன்று அதிகாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
அவரை சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.
அவர், குறிப்பாக விவசாயத் துறையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
நியூசிலாந்துக்கு வாழைப்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களை ஏற்றுமதி செய்வது குறித்து அவருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், ரக்பி விளையாட்டை வளர்ப்பதற்கான உதவியை நியூசிலாந்தை நாடுவதன் மூலம் விளையாட்டு உறவுகளை வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, போலந்து வெளியுறவு அமைச்சர் சிகோர்ஸ்கி புதன்கிழமை சிறிலங்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போலந்து, ஆறு மாதங்கள் அதனை வழிநடத்தும்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான சிறிலங்காவின் முயற்சிகளுக்கு, போலந்தின் உதவியை நாடுவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.