முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இராணுவ அதிகாரி மீது குற்றப்பத்திரம் தாக்கல்
லங்கா சதொசாவுக்குச் சொந்தமான 39 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட மூன்று பேர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிதியில், கரம் மற்றும் செஸ் பலகைகள் வாங்கப்பட்டு, அப்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக விநியோகிக்கப்பட்டிருந்தன.
முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக, தண்டனைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சதி, முறைகேடு மற்றும் உதவி செய்தல் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது விநியோகிப்பதற்காக லங்கா சதொசா 28,000 கரம் மற்றும் செஸ் பலகைகளை வாங்கியதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
பாடசாலை விளையாட்டு அபிவிருத்திக்காக பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படுவதற்காக எனக் கூறி லங்கா சதொசா இவற்றை வாங்கியது.
இந்த விளையாட்டுப் பலகைகள் 2014 டிசம்பர் 18,ஆம் திகத வாங்கப்பட்ட போது, முதல் குற்றவாளியான நளின் பெர்னாண்டோ லங்கா சதொசாவின் தலைவராக இருந்தார்.
இரண்டாவது குற்றவாளியான மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டு அமைச்சராக இருந்தார்.
மூன்றாவது குற்றவாளியான மேஜர் ஜெனரல நந்த மல்லவராச்சி விளையாட்டு அமைச்சின் செயலராக இருந்து, இதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
வாங்கப்பட்ட 14,000 கரம் பலகைகள் மற்றும் 14,000 செஸ் பலகைகள் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.