காசா மீறல்கள் சிறிலங்காவை நினைவுபடுத்துகின்றன- ஐ.நா
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துவதாக, ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ரொம் பிளெச்சர் (Tom Fletcher) தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,காசாவின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற அட்டூழியங்களை சர்வதேச சமூகம் தடுக்க தவறியதைச் சுட்டிக்காட்டி அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்கள் பாரியளவில் மீறப்பட்ட முன்னைய சந்தர்ப்பங்களில், ஐ.நா செயற்பட்ட விதம் குறித்த முந்தைய மீளாய்வுகளின் போது, ,மியன்மார், சிறிலங்கா, செர்பனிகா, ருவாண்டா போன்ற நாடுகளில் இழைக்கப்பட்ட மீறல்களின் அளவு குறித்து, ஐ.நா செயற்படத் தவறியது என தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொல்லப்பட்டவர்கள், மௌனமாக்கப்பட்டவர்களுக்கு, என்ன ஆதாரங்கள் தேவை? என்றும் ரொம் பிளெச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.