மேலும்

 “சிறிலங்காவுக்கு முதுகெலும்பு இல்லை“ – கஜேந்திரகுமார்

இனப்படுகொலை  குற்றச்சாட்டை எதிர் கொள்வதற்கு  சிறிலங்காவுக்கு முதுகெலும்பு இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று, இடம்பெற்ற  விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய நேர்காணலின்போது, சிறிலங்காவில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருத்து.  இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சிறிலங்கா அரசாங்கத்தின்  நகைப்புக்கிடமான, கேலிக்கூத்தான  மனநிலையை, இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது.

வெளிவிவகார அமைச்சர் என்பவர் சர்வதேசத்துக்கு பதிலளிக்க வேண்டியவர். அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்கக் கூடாது.

இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர்க்கொள்ள சிறிலங்காவுக்கு முதுகெலும்பு இல்லை.

அதனால்தான் இவ்வாறான பிழையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சிறிலங்காவில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. அது ஒரு மிகப்பெரிய குற்றம்.

ஆனால்,இனப்படுகொலை என்று கூறினால், சட்ட நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

இனப்படுகொலை தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களினால்,  சுயாதீனமாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சிறிலங்காவில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக,  கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்ற  கருத்தை வெளிவிவகார அமைச்சர்  உடனடியாக மீளப்பெற வேண்டும்.

இந்தக் கருத்து அவர்  பதவி வகிக்கும் அமைச்சுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

சிறிலங்காவில்  இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் உங்களால் ஏன் நீதியை நிலைநாட்ட முடியவில்லை?

உங்களிடம் ஒரு குற்றவுணர்வு இருப்பதனால்தான்,  நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அரசாங்கம்  தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *