மேலும்

எம்சிசி கொடையை இழக்கும் நிலையில் சிறிலங்கா

வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடாவிடின், மிலேனியம் சவால் நிறுவனத்தின் (எம்சிசி) 480 மில்லியன் டொலர் கொடையை, சிறிலங்கா இழக்கும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மிலேனியம் சவால் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான வதிவிட பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,

“வரும் செப்ரெம்பர் மாதம் எமது சபை கூடுவதற்கு முன்னர், சிறிலங்கா இந்த 480 மில்லியன் டொலர் திட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கான அமைச்சரவை ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இந்த திட்டத்துக்கு அனுமதி பெற முடியாவிட்டால், இந்த வளங்களை வேறு இடங்களில் பயன்படுத்துமாறு, எமது சபையின் உறுப்பினர்கள் பரிந்துரைக்கலாம். சபை எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

எம்சிசியின் இந்தக் கொடை, சிறிலங்காவுக்கு ஒரு மூலத்தில் இருந்து இதுவரை கிடைத்த மிகப்பெரிய கொடையாகும்.

எம்சிசி கொடை, மேல் மாகாணத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் போக்குவரத்தை மேம்படுத்தவும், பிராந்தியத்தில் உற்பத்தியாளர்களை கொழும்பில் உள்ள வணிக மையத்தின் ஏற்றுமதி சந்தைகளுடன் இணைக்கவும் பயன்படும்.

எமது அமைப்பும், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும் இதற்கு  முன்னுரிமை அளித்தன.  ஏனெனில் இதற்கான சாளரம் குறுகியது. இந்த திட்டத்தில் கையெழுத்திடுவதற்காக நாங்கள் கூட்டாக மிகவும் கடினமாக உழைத்தோம்.

எம்சிசி கொடையைப் போல, அக்சா, சோபா உடன்பாடுகளுக்கு காலக்கெடு இல்லை  என்பதால், இந்த இரண்டு இராணுவ உடன்பாடுகளை புதுப்பித்தல் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எங்கள் கொடை, அக்சா, மற்றும் சோபாவுடன், குழப்பிக் கொள்ளப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவை முற்றிலும் தனித்தனியாக உள்ளன.

பல ஆண்டுகளாக அமெரிக்காவுடன் சிறிலங்கா கொண்டிருந்த நீண்டகால உடன்பாடுகளைப் புதுப்பிக்கும் இந்த இரண்டு இராணுவ உடன்பாடுகளுக்கும், எம்சிசி கொடைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

எம்சிசி சுதந்திரமானது, அரசியல்சார்பற்றது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *