மேலும்

போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி கவலையில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நேற்று முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

“ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் புலனாய்வு துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

புலனாய்வுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் தான், நாங்கள் எங்கள் படையினரை நிலைநிறுத்துகிறோம். நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

நாடு எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க, இராணுவம் ஒரு வலுவான புலனாய்வுப் பிரிவைக் கொண்டிருக்க வேண்டும்.

இராணுவ புலனாய்வுப் பிரிவு அதன் பிரதான தரத்தில் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

எமது புலனாய்வுத்துறையின் ஆற்றல் எப்போதும் நன்றாக இருந்தது, அதனை இன்னும் முன்னேற்ற முடியும்.

தொழில்நுட்பத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கான படிநிலைக்கு வரும்போது, மாற்றங்கள் தவிர்க்க முடியாதாக இருக்கும்,

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு, மேற்கு நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. அதுபற்றி எனக்குத் தெரியும்.

அவை அடிப்படையில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள்.  பல்வேறு கருத்துகளும் கவலைகளும் இருக்கக் கூடும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

தங்கள் கவலைகளை வெளிப்படுத்தவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.  ஆனால் அதுபற்றிய நான் கவலைப்படவில்லை.

அந்த சக்திகள் சிறிலங்காவின் விவகாரங்களில் தலையிடு செய்யமுயன்றது இது தான் முதல்முறை அல்ல.

சில நாடுகள் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன. மன்னாரில் பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட போதும், அதே சக்திகள் அதனைப் போர்க்குற்றம் என்று குரல் எழுப்பினர். ஆனால் கடைசியில் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இராணுவத் தளபதியாக என்னை நியமித்தார்.

அதற்கமைய நாட்டினதும் இறையாண்மையையும் மக்களையும் பாதுகாப்பது தான்,  இராணுவத் தளபதியாக எனது முக்கிய அக்கறையாகும்.

எந்தப் பகுதியில் எத்தனை முகாம்கள் மற்றும் படையினரை நிறுத்த வேண்டும் என்பது குறித்து முப்படைகளுக்கு சிறந்த மதிப்பீடு உள்ளது.

புலனாய்வுத்துறை அறிக்கைகள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில், முகாம்களைக் குறைக்கலாமா அல்லது அதிகரிக்கலாமா என்பதை நாங்கள் தீர்மானிப்போம்.

எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றவோ அல்லது குறைக்கவோ இராணுவத்திடம் எந்த திட்டமும் கிடையாது.

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து  சில தமிழ் அரசியல்வாதிகள் கவலைகளை எழுப்பியுள்ளனர். சிங்களவர்களின் தளபதி என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

நான் முழு நாட்டிற்கும் இராணுவத் தளபதி, ஒரு இனக் குழுவினருக்கான தளபதி அல்ல.

நான் என் குழந்தைப் பருவத்தை மாத்தளையிலேயே கழித்தேன், அங்கு நான் சிங்கள, தமிழர்கள், முஸ்லிம்களுடன் ஒற்றுமையுடன் வளர்ந்தேன்.எனவே, அனைத்து சமூகங்களின் உணர்வுகளையும் நான் புரிந்து கொள்கிறேன்.

இராணுவம் தகவல்களை வழங்காமல் தவிர்க்கிறது அல்லது நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியம் செய்கிறது கூறுவது சரியானது என நான் நினைக்கவில்லை.

மற்ற குடிமக்களைப் போல, இராணுவமும் நாட்டின் நீதித்துறையை மதிக்கிறது. நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறோம்.

அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டு என்பது கொள்கை சார்ந்த விவகாரம், அதுபற்றிக் கருத்து வெளியிட முடியாது.

எனினும், அந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்தால், அதற்கு நான் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *