மேலும்

கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு

பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து, நாமல் ராஜபக்ச மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு, தாமரைத் தடாகம் அரங்கில் சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது. இந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் எவரும் அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை.

இது ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சமூக ஊடகங்கள் மூலம் நாமல் ராஜபக்சவிடம், இதுகுறித்து ஊடகவியலாளர்கள் முறையிட்டனர்.

அவர் நிகழ்வை யூரியூப்பில் பாருங்கள் என பதிலளித்திருந்தார். இதனால் எரிச்சலடைந்த ஊடகவியலாளர்கள், சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்த விவகாரம் பூதாகாரமாக வடிவெடுத்துள்ள நிலையில், நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட வசதியீனங்களுக்காக ஏற்பாட்டுக் குழு சார்பாக மன்னிப்புக் கோருவதாக நாமல் ராஜபக்ச கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

நிலைமைகளை அறிந்ததும் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவும், கீச்சகப் பதிவில் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்றும், ஒழுங்கமைப்பு குறைபாடே இது என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஷெகான் சேமசிங்கவும், இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரியுள்ளதுடன், கடினமான நேரத்தில் ஊடகங்களின் ஆதரவை ஒழுங்கமைப்பாளர்கள் மறந்து விடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பந்துல குணவர்த்தனவும் இந்தச் சம்பவம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

எனினும், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச, ஊடகங்களை  எதிர்கொள்ளத் தயங்குவதாகவும், அதனாலேயே இவ்வாறு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோத்தாபய ராஜபக்சவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்புவதை பொதுஜன பெரமுன விரும்பவில்லை என்றும்,  கட்சிக்கு சார்பான ஊடகங்களின் ஊடகவியலாளர்களை அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *