மேலும்

அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை

அரச புலனாய்வுச் சேவையை, ஒரு சுயாதீன அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும், அது சட்டத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க, சிறிலங்கா அதிபர்  மூன்று பேர் கொண்ட  சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக நேற்று, முன்னிலையாகி சாட்சியமளித்த சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினர்களான, உச்சநீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொட, முன்னாள் காவல்துறை மா அதிபர் இலங்ககோன், பத்மசிறி ஜெயமான்ன ஆகியோர், இவ்வாறு கூறினார்.

தமது விசாரணை அறிக்கையில் இதனை ஒரு பரிந்துரையாக முன்வைத்திருப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“காவல்துறை, புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் தரப்பிலுள்ள மோசமான குறைபாடுகள், 21/4 தாக்குதலை நடத்தியவர்கள் தமது நோக்கத்தை அடைவதற்கு வழிவகுத்துள்ளன.

இராணுவப் புலனாய்வுப் பணியகம் போன்ற, ஏனைய புலனாய்வு பிரிவுகளைப் போல, அரச புலனாய்வுச் சேவை செயற்படக் கூடாது.

புலனாய்வு அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான சரியான பொறிமுறை இருக்கவில்லை. பல புலனாய்வு அமைப்புகளை வைத்திருப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

ஆனால், புலனாய்வு அமைப்புகளின் தன்மை, நாட்டின் தேவைகளுக்கு பொருத்தமானதாக .இருக்க வேண்டும்.

அதன்படி, முதன்மையான புலனாய்வு அமைப்பை, சில சட்டவிதிகளின் கீழ் செயற்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்தோம்.

புலனாய்வு ஒருங்கிணைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. தாக்குதல் குறித்த முதலாவது எச்சரிக்கை ஏப்ரல் 5 ஆம் நாள் பெறப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அன்று தொடக்கம், குண்டுவெடிப்புகள் நடக்கும் வரை, பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை.

தாக்குதல் நடப்பதற்கு, 16 மணி நேரத்திற்கு முன்னரும் கூட, நிகழவிருக்கும் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்துள்ளது” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *