மேலும்

காஷ்மீர் நிலவரங்கள் குறித்து மகிந்தவுக்கு விளக்கிய பாகிஸ்தான் தூதுவர்

சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சலைச் சந்தித்து, ஜம்மு- காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக,  விளக்கமளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, காஷ்மீரின் தற்போதைய நிலைமைகள் குறித்து மகிந்த ராஜபக்சவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்தியா மேற்கொண்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அனைத்துலக சட்டத்தை முற்றிலும் மீறுவதாக அமைந்துள்ளது என்று மகிந்த ராஜபக்சவிடம் பாகிஸ்தான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இது அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசம் என்பதால், ஜம்மு-காஷ்மீரின் சனத்தொகைப் பரம்பலை மாற்ற முற்படும் எந்தவொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் இப்பகுதியில் நிலைமையை தீவிரமாக்கும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்றும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் பாகிஸ்தான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தெற்காசியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *