மேலும்

மீண்டும் வலுப்பெறும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் – ஷிரந்தி மாற்று வேட்பாளரா?

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை, குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். நாட்டின் அதிகாரம் முழுவதும் அவர்களின் கைகளிலேயே இருந்தது.

இது, 2015 இல் அவர்களின் தோல்விக்கான முக்கியமான காரணமாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

2015 தோல்விக்குப் பின்னர், தாங்கள் கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாக ராஜபக்சவினர் கூறிவந்தனர்.

நேற்றுமுன்தினம் நாமல் ராஜபக்சவும் கூட ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது, அதனைக் கூறியிருந்தார்.

எனினும், நேற்று நடந்த பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் ராஜபக்ச குடும்பத்தினரே, முன்வரிசையை ஆக்கிரமித்திருந்தனர்.

மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச, சமல் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்குப் பின்னர், மகிந்தவின் புதல்வர்களான, நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் பலரும் அமர்ந்திருந்தனர்.

கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நிறுத்தியுள்ள மகிந்த ராஜபக்ச, தாம் அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவேன் என்றும், தானும் கோத்தாபய ராஜபக்சவும் இணைந்து ஆட்சியை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ராஜபக்ச குடும்ப ஆட்சி வலுப்பெறும் என்பதை நேற்றைய மாநாட்டில் இருந்து உணர முடிந்துள்ளது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவும் மாநாட்டில் பங்கேற்றதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாது போனால், மாற்று வேட்பாளராக அவரை களமிறக்கும் உத்தியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக, கோத்தாபய ராஜபக்சவுக்குப் பதிலாக சமல் ராஜபக்சவையே, கனளமிறக்க வேண்டும் என, பொதுஜன பெரமுனவின் இடதுசாரி பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

எனினும், அதனை மகிந்த ராஜபக்ச செவிமடுக்கவில்லை. கோத்தாபய ராஜபக்சவையே களமிறக்கியுள்ளார். அத்துடன் தனது மனைவிக்கும் இந்த மாநாட்டில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சமல் ராஜபக்சவின் அரசியல் வாரிசும், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சசீந்திர ராஜபக்ச நேற்றைய மாநாட்டில் நான்காவது வரிசையில்- ஒதுக்குப் புறமாகவே அமர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *