மேலும்

நாட்டின் இறைமையில் யாரும் கைவைக்க விடமாட்டேன் – கோத்தா சூளுரை

நாட்டின் இறையாண்மையை வேறெந்த எந்த நாட்டிற்கும்  விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடந்த பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

”மக்களால் கோரப்பட்ட தேசிய பணியை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்.

வெளிநாடுகளுடன் இருதரப்பு உறவுகளைப் பராமரிக்கும்போது, மரியாதைக்குரிய நிர்வாகத்தை நாங்கள் மீட்டெடுப்போம். அது வேறு எந்த நாட்டுக்கு முன்பாகவும் தலைவணங்காது.எப்போதும் இறையாண்மையைப் பாதுகாக்கும். அனைத்து நாடுகளுடனும் சமமான உறவைப் பேணும். தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும்.

முன்னர் நான் நாட்டுக்காக என் பொறுப்பை நிறைவேற்றும்போது, ஒருபோதும் ஒரு வெளிச்சக்தியை தலையிட அனுமதிக்கவில்லை. எனது நாட்டுக்கு எதிராக சென்ற எவருக்கும் நான் ஒருபோதும் தலைவணங்கவில்லை.

எதிர்காலத்தில் கூட, எனது தாய்நாட்டின் இறையாண்மையில் கைவைக்க யாரையும் நான் அனுமதிக்கமாட்டேன்.

ஒரு அதிபரிடம் மக்கள் எதிர்பார்க்கும் தலைமையை என்னால் கொடுக்க முடியும் என்பதை ஏற்கனவே  நான் நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்துள்ளேன்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது அரசாங்கத்தின் முக்கிய கடமை. சிறிலங்காவை மீண்டும் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடாக மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.   அனைத்து குடிமக்களின் பாதுகாப்பிற்கும் நான் பொறுப்பேற்கிறேன்.

வெவ்வேறு மத மற்றும் இன சமூகங்களின் ஒற்றுமையே சிறிலங்காவின் பலமாக இருக்கும்.

அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை நான் உருவாக்குவேன். இனவெறி அல்லது தீவிரவாதம் நாட்டில் வேர்களை நிலைநிறுத்த நான் அனுமதிக்கமாட்டேன்.

வடக்கில் உள்ள மக்களின் சிறப்பு எதிர்பார்ப்புகளைப் பற்றியும் நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.  அவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை நாங்கள் காண்போம், ” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *