மேலும்

அதிபர் வேட்பாளர் கோத்தா – அதிகாரபூர்வமாக அறிவித்தார் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு சுகததாச உள்ளரங்கில்  நடைபெற்று வரும் முதலாவது தேசிய மாநாட்டில்,  சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

பிற்பகல் 3 மணியளவில் பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு ஆரம்பமானது. இதையடுத்து, மகிந்த ராஜபக்ச  கட்சியின் தலைமைப் பொறுப்பை, பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம் இருந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனையடுத்து, மாநாட்டில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, சரியாக 4 மணியளவில், கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவதாக அறிவித்தார்.

அப்போது, திடீரென மாநாட்டில் பங்கேற்றிருந்தவர்கள் ஒரே நேரத்தில் பெரும் கரகோசம் எழுப்பி, கோத்தாபய ராஜபக்சவின் படங்களை உயர்த்திப் பிடித்தனர்.

இதையடுத்து, கோத்தாவை வரவேற்கும் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. உடனடியாக கோத்தாபய ராஜபக்ச மேடையில்  மகிந்தவுடன்  காட்சி அளித்தார்.

பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சுதந்திரக்  கட்சியின் உத்தரவையும் மீறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எஸ்.பி.திசநாயக்க, டிலான் பெரேரா, சரத் அமுனுகம ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த மாநாட்டில், கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வட-கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின்  பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *